பொத்தேரியில் வியாபாரிகள் சங்க நிர்வாகிக்கு அரிவாள் வெட்டு; நடவடிக்கை எடுக்கக்கோரி ஆர்ப்பாட்டம்

பொத்தேரி பகுதி வியாபாரிகள் சங்க தலைவர் பூட்டோ தாக்குதலில் ஈடுபட்டவர்களிடம் நடந்த சம்பவத்தை தட்டி கேட்ட போது அவர்கள் அவரை அரிவாளால் வெட்டிவிட்டனர்.

Update: 2021-12-09 11:46 GMT
செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரி ஜி.எஸ்.டி. சாலையில் உள்ள ஒரு ஓட்டலில் சிலர் சாப்பிட்டுவிட்டு பணம் தர மறுத்தனர். பணம் கேட்ட ஓட்டல் உரிமையாளர் மற்றும் அவரது மனைவியை அவர்கள் சரமாரியாக தாக்கி விட்டு அங்கிருந்து தப்பிச்சென்று விட்டனர். இது குறித்து பொத்தேரி பகுதி வியாபாரிகள் சங்க தலைவர் பூட்டோ தாக்குதலில் ஈடுபட்டவர்களிடம் நடந்த சம்பவத்தை தட்டி கேட்ட போது அவர்கள் அவரை அரிவாளால் வெட்டிவிட்டனர். இதில் காயமடைந்த பூட்டோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து பூட்டோ மற்றும் பாதிக்கப்பட்ட ஓட்டல் உரிமையாளர் இருவரும் மறைமலைநகர் போலீசில் புகார் செய்தனர். 


புகாரின் பேரில் மறைமலைநகர் போலீசார் சம்பந்தப்பட்டவர்களை இதுவரை கைது செய்யாததை கண்டித்து பொத்தேரி பஸ் நிறுத்தம் அருகே தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு செங்கல்பட்டு வடக்கு மாவட்ட தலைவர் இந்திரஜித் தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகிகள் மகேஸ்வரன், அமல்ராஜ், உத்திரகுமார், செல்வகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான வியாபாரிகள், சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டு வியாபாரியை அரிவாளால் வெட்டிய சம்பந்தப்பட்டவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்று கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சத்தியநாராயணன், பாஸ்கர், சந்திரசேகர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்