ஸ்ரீபெரும்புதூர் அருகே லாரி சக்கரத்தில் சிக்கி தொழிலாளி சாவு
ஸ்ரீபெரும்புதூர் அருகே லாரி சக்கரத்தில் சிக்கி தொழிலாளி தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மொளச்சூர் பகுதியை சேர்ந்தவர் செல்வமணி (வயது 38). இவர் ஸ்ரீபெரும்புதூர் சிப்காட்டில் தனியார் நிறுவனத்தில் சுமைதூக்கும் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று மொளச்சூர் கிராமத்தில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் சிப்காட்டில் உள்ள தனியார் நிறுவனத்துக்கு தனது மோட்டார் சைக்கிளில் வேலைக்கு சென்று கொண்டிருந்தார்.ஸ்ரீபெரும்புதூர் சிப்காட் நுழைவுவாயில் அருகே நிலை தடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தார்.
அப்போது பின்னால் வந்த லாரியின் சக்கரத்தில் சிக்கியதில் அவர் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். தகவல் அறிந்து விரைந்து வந்த ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாங்கம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.