மின்சார ரெயிலில் அபாய சங்கிலியை இழுத்தவருக்கு அபராதம்
மின்சார ரெயிலில் அபாய சங்கிலியை இழுத்தவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
சென்னையை அடுத்த தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரை நோக்கி சென்ற மின்சார ரெயில், பரங்கிமலை ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்ற சிறிது நேரத்தில் பயணி ஒருவர், ரெயில் பெட்டியில் உள்ள அபாய சங்கிலியை பிடித்து இழுத்தார். இதனால் நடுவழியில் ரெயில் நிறுத்தப்பட்டது.
ரெயில்வே அதிகாரிகள் அபாய சங்கிலியை இழுத்தவரை பிடித்து, எதற்காக அபாய சங்கிலியை பிடித்து இழுத்தீர்கள்? என்று கேட்டனர்.
அப்போது தெலுங்கில் பேசிய அவர், தான் ஐதராபாத்தை சேர்ந்த பெர்னாண்டஸ் (வயது 30) எனவும், தாம்பரத்தில் இருந்து பரங்கிமலையில் ஒருவரை பார்க்க மின்சார ரெயிலில் வந்ததாகவும், பரங்கிமலை ரெயில் நிலையத்தில் ரெயில் நின்றதை கவனிக்காததால், ரெயில் அங்கிருந்து புறப்பட்டு விட்டது. இதனால் பயத்தில் அபாய சங்கிலியை இழுத்ததாக பதற்றத்துடன் கூறினார். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ரூ.1,000 அபராதம் விதிக்கப்பட்டதாகவும், பின்னர் அவருக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்ததாகவும் ரெயில்வே போலீசார் தெரிவித்தனர்.