பெங்களூருவில் இருந்து கேரளாவுக்கு லாரியில் கடத்த முயன்ற புகையிலை பொருட்கள் பறிமுதல் டிரைவர் உள்பட 2 பேர் கைது
பெங்களூருவில் இருந்து கேரளாவுக்கு லாரியில் கடத்த முயன்ற புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த டிரைவர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
நல்லம்பள்ளி:
தொப்பூர் அருகே உள்ள குறிஞ்சி நகர் சுங்கச்சாவடியில் நேற்று போலீஸ் இன்ஸ்பெக்டர் ரங்கசாமி தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பெங்களூருவில் இருந்து சேலம் நோக்கி சென்ற லாரியை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அதில் மாட்டு தீவனம் ஏற்றி செல்வதாக போலி ரசீது தயாரித்து புகையிலை பொருட்கள் கடத்தி சென்றது தெரிந்தது. இதுகுறித்து லாரியில் வந்த 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அவர்கள் கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் செவன்குழி பகுதியை சேர்ந்த டிரைவர் ரஷித் (வயது46), பாலக்காடு மாவட்டம் அஞ்சுமூர்த்தி பகுதியை சேர்ந்த கிளீனர் அசரப்அலி (39) என்பதும், பெங்களூருவில் இருந்து கேரளாவுக்கு புகையிலை பொருட்கள் கடத்தி சென்றதும் தெரிந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரும் கைது செய்யப்பட்டனர். மேலும் லாரியுடன் பல லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.