பெங்களூருவில் ரூ.11 கோடி போதைப்பொருட்கள் பறிமுதல் - கேரளாவை சேர்ந்தவர் கைது
பெங்களூருவில் விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்த ரூ.11 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக கேரளாவை சேர்ந்தவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
பெங்களூரு:
கேரளாவை சேர்ந்தவர் கைது
பெங்களூருவில் போதைப்பொருட்கள் விற்பனை மற்றும் போதைப்பொருட்கள் பயன்படுத்துபவர்களை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வருகிறார்கள். இந்த நிலையில், கொடிகேஹள்ளி போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் போதைப்பொருட்கள் விற்பனை செய்ய ஒரு நபர் முயற்சி செய்வது பற்றி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. பின்னர் போதைப்பொருட்கள் விற்பனை செய்ய முயன்ற நபரை கைது செய்து விசாரணை நடத்தினார்கள்.
விசாரணையில், அவர் கேரள மாநிலத்தை சேர்ந்த அனூப் என்று தெரியவந்தது. போதைப்பொருள் விற்பனையாளரான அனுப், தனது இரண்டு கூட்டாளிகளுடன் சேர்ந்து போதைப்பொருட்களை விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. எளிதில் பணம் சம்பாதிக்கும் ஆசையில் அவர் போதைப்பொருட்களை விற்பனை செய்து வந்துள்ளார்.
ரூ.11 கோடி மதிப்பு
குறிப்பாக விருந்து நிகழ்ச்சிகளுக்கு அவர் போதைப்பொருட்கள் விற்பனை செய்வதை தொழிலாக வைத்திருந்தார். அதாவது பெங்களூரு மற்றும் மங்களூரு உள்ளிட்ட நகரங்களில் பெரிய அளவில் நடக்கும் விருந்து நிகழ்ச்சிகளுக்கு தேவையான போதை ஆயில், கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களை அனூப் விற்பனை செய்து வந்துள்ளார். இதுதவிர சிறு சிறு வியாபாரிகளுக்கும், தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் கம்ப்யூட்டர் என்ஜினீயர்கள், பிற ஊழியர்களுக்கும் போதைப்பொருட்கள் விற்பனை செய்வதை வாடிக்கையாக வைத்திருந்தது தெரியவந்தது.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து பெங்களூரு மற்றும் மங்களூருவுக்கு சட்டவிரோதமாக போதைப்பொருட்களை கடத்தி சென்று தனது கூட்டாளிகள் மூலம் விற்று வந்துள்ளார். அவரிடம் இருந்து ரூ.11 கோடி மதிப்பிலான போதை ஆயில், கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. கைதான அனூப் மீது கொடிகேஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவத்தில் தலைமறைவாக உள்ள அனூப்பின் கூட்டாளிகள் 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
முருகன் பார்வையிட்டார்
மேற்கண்ட தகவலை கிழக்கு மண்டல சட்டம்-ஒழுங்கு கூடுதல் போலீஸ் கமிஷனர் முருகன் தெரிவித்தார். முன்னதாக கைதான அனூப்பிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட ரூ.11 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள், வடகிழக்கு மண்டல துணை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்தது.
அந்த போதைப்பொருட்களை கூடுதல் போலீஸ் கமிஷனர் முருகன் மற்றும் துணை போலீஸ் கமிஷனர் பாபா ஆகியோர் பார்வையிட்டனர்.