திருமணத்திற்கு பெண் பார்க்க செல்ல இருந்த நிலையில் மோட்டார் சைக்கிள் விபத்தில் போலீஸ்காரர் சாவு

பெலகாவி அருகே திருமணத்திற்கு பெண் பார்க்க செல்ல இருந்த நிலையில், மோட்டார் சைக்கிள் விபத்தில் போலீஸ்காரர் பலியான பரிதாபம் நடந்துள்ளது.

Update: 2021-12-08 21:26 GMT
பெங்களூரு:

பெண் பார்க்க...

  பெலகாவி மாவட்டம் கோகாக் அருகே குதலி கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்த் சுலதாலா (வயது 24). இவர், போலீஸ்காரர் ஆவார். பெலகாவியில் உள்ள போலீஸ் நிலையத்தில் ஆனந்த் போலீஸ்காரராக பணியாற்றி வந்தார். ஆனந்திற்கு பெண் பார்த்து திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு செய்திருந்தனர். அதன்படி, நேற்று முன்தினம் ஒரு பெண்ணை பார்க்க செல்லலாம் என்று ஆனந்திடம் பெற்றோர் கூறி இருந்தார்கள்.

  இதையடுத்து, நேற்று முன்தினம் மதியம் வேலை முடிந்ததும் மோட்டார் சைக்கிளில் அவர் வீட்டுக்கு புறப்பட்டு சென்றார். அங்கிருந்து பெண் வீட்டுக்கு தனது குடும்பத்துடன் செல்ல ஆனந்த் முடிவு செய்திருந்தார்.

போலீஸ்காரர் சாவு

  இந்த நிலையில், கோகாக் அருகே பெனஜிகமரடி கிராமத்தில் வரும் போது ஆனந்தின் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலையோரம் பல்டி அடித்து கவிழ்ந்ததாக கூறப்படுகிறது. இதில், தலையில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து விட்டார். ஆனந்த் படுகாயத்துடன் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் கோகாக் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து ஆனந்த் உடலை கைப்பற்றி விசாரித்தனர்.

  பெனஜிகமரடி கிராமத்தில் வரும் போது ஆனந்த் மோட்டார் சைக்கிள் மீது மற்றொரு வாகனம் மோதியதால், அவர் தவறி விழுந்து பலியானதாக முதலில் கூறப்பட்டது. ஆனால் அவரது மோட்டார் சைக்கிள் கவிழ்ந்து விழுந்ததில் பலியானது தெரியவந்துள்ளது. இதுகுறித்து கோகாக் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணத்திற்காக பெண் பார்க்க வேண்டும் என்ற ஆசையில் சென்ற போலீஸ்காரர் விபத்தில் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்