முதலீடு செய்தால் அதிக பணம் தருவதாக கூறி ரூ.4¼ கோடி மோசடி- பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவில் புகார் தெரிவிக்கலாம்
முதலீடு செய்தால் அதிக பணம் தருவதாக கூறி ரூ.4¼ கோடி மோசடி செய்யப்பட்டு உள்ளது. இதில் பாதிக்கப்பட்டவர்கள் ஈரோடு மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவில் புகார் செய்யலாம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.;
ஈரோடு
முதலீடு செய்தால் அதிக பணம் தருவதாக கூறி ரூ.4¼ கோடி மோசடி செய்யப்பட்டு உள்ளது. இதில் பாதிக்கப்பட்டவர்கள் ஈரோடு மாவட்ட பொருளாதா ர குற்றப்பிரிவில் புகார் செய்யலாம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
முதலீடு
சத்தியமங்கலம் கிழக்கு வீதியில் குவாலிட்டி டிரேடர்ஸ், ரிலிப் ஹெர்பல் புராடக்ட் என்ற பெயரில் மூலிகை மருந்து தயாரிக்கும் ஆலை கடந்த 2018-ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் 2019-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் வரை செயல்பட்டு வந்துள்ளது. இதன் உரிமையாளர்கள் மற்றும் பங்குதாரர்களாக சத்தியமங்கலம் கெம்பநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்த தங்கராஜ், துரைசாமி, புளியங்கோம்பை பகுதியை சேர்ந்த பிரகாஷ், கோணார் நாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்த ஆனந்தகுமார், பவானி ஆண்டிபாளையத்தை சேர்ந்த பிரபாகரன், சத்தி வடக்கு பேட்டையை சேர்ந்த பொன்னுசாமி ஆகியோர் இருந்துள்ளனர்.
இந்த மூலிகை மருந்து தயாரிக்கும் ஆலையில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால், 100 நாட்களுக்கு தினந்தோறும் ரூ.2 ஆயிரத்து 500 வங்கி மூலமாக அனுப்புவதாகவும், 100-வது நாள் முடிவில் முதலீடு செய்த பணம் திரும்ப தருவதாகவும், இதேபோல், ரூ.10 ஆயிரம் முதலீடு செய்தால் 100 நாட்களுக்கு தினந்தோறும் ரூ.100 எனவும், 300 நாட்களுக்கு பிறகு முதலீடு செய்த பணத்தை திரும்ப தருவதாகவும் துண்டுபிரசுரம் மூலம் விளம்பரப்படுத்தி உள்ளனர்.
3 பேர் கைது
இதனை பார்த்து ஈரோடு, திருப்பூர், தூத்துக்குடி, சேலம், கரூர், கடலூர், விருதுநகர், திண்டுக்கல், புதுச்சேரி, சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் முதலீடுகளை வங்கி மூலம் அனுப்பி உள்ளனர். கடந்த 2019-ம் ஆண்டு மூலிகை மருந்து தயாரிக்கும் ஆலையினர் அவர்கள் கூறியதை போல முதலீடுகளையும், 100 நாட்களுக்கு உண்டான பணத்தையும் வழங்கவில்லை.
இதனால் பாதிக்கப்பட்டவர்கள் சத்தியமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து, அந்த நிறுவனத்தின் பொறுப்பாளர்கள் தங்கராஜ், பிரகாஷ், ஆனந்தகுமார், பிரபாகரன், பொன்னுசாமி, துரைசாமி ஆகிய 6 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். இதில், பிரபாகரன், பொன்னுசாமி, துரைசாமி ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
ரூ.4¼ கோடி மோசடி
இதற்கிடையில் இந்த வழக்கு ஈரோடு மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து, பொருளாதார குற்றப்பிரிவு போலீசில், குவாலிட்டி டிரேடர்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்து பணத்தை பறிகொடுத்ததாக இதுவரை 17 பேர் புகார் அளித்துள்ளனர். மேலும், இந்த நிறுவனத்தினர் 586 பேரிடம் ரூ.4 கோடியே 37 லட்சம் வரை முதலீடு பெற்று மோசடி செய்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
எனவே, குவாலிட்டி டிரேடர்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்து பாதிக்கப்பட்ட மக்கள் ஈரோடு ஸ்டேட் வங்கி ரோட்டில் உள்ள ஈரோடு மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் அளிக்கலாம். மேலும் 0424-2256700 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டும் புகார் தெரிவிக்கலாம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.