காதல் திருமணம் செய்த கார் டிரைவர் படுகொலை

காதல் திருமணம் செய்த கார் டிரைவர் தென்காசியில் படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக வாலிபரை போலீசார் கைது செய்தனர். மேலும் 2 பேர் கோர்ட்டில் சரண் அடைந் தனர்.

Update: 2021-12-08 20:16 GMT
தென்காசி:
காதல் திருமணம் செய்த கார் டிரைவர் தென்காசியில் படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக வாலிபரை போலீசார் கைது செய்தனர். மேலும் 2 பேர் கோர்ட்டில் சரண் அடைந் தனர்.

காதல் திருமணம்

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் மதுரை ரோடு பெருநாழி விலக்கு பகுதியை சேர்ந்த கணபதி மகன் அரவிந்த் (வயது 30).
தென்காசி கீழப்புலியூரை சேர்ந்த ராஜேந்திரன் மகள் மாலா (25). 
ராஜேந்திரன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு விளாத்திகுளத்திற்கு சென்று வசித்து வருகிறார். 

அப்போது அரவிந்திற்கும், மாலாவிற்கும் இடையே காதல் மலர்ந்தது. இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பெண் வீட்டில் காதலுக்கு எதிர்ப்பு கிளம்பியது. ஆனாலும் இருவரும் 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.

வீடு திரும்பவில்லை

இந்த நிலையில் அரவிந்த் கடந்த 3-ந் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. அவரது செல்போன் அணைத்து (சுவிட்ச்-ஆப்) வைக்கப்பட்டிருந்தது. இதனால் சந்தேகமடைந்த அவரது மனைவி மாலா தென்காசி போலீசில், தனது கணவரை காணவில்லை, என்று புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அரவிந்த் யாரிடமெல்லாம் தொடர்பு கொண்டு செல்போனில் பேசியுள்ளார்? என்பது குறித்து ஆய்வு செய்தனர்.

கொலை அம்பலம்

அப்போது, அவர் தென்காசியில் கீழப்புலியூரை சேர்ந்த சீதாராமன் என்பவருடன் கடைசியாக பேசியது தெரியவந்தது. சீதாராமனை தேடியபோது காணவில்லை. பின்னர் அவருடன் யாருக்கெல்லாம் தொடர்பு இருந்தது என்று விசாரித்தனர்.

தொடர்ந்து கீழப்புலியூரை சேர்ந்த மாரியப்பன் மகன் பொன்னரசு (20) என்பவரை போலீசார் விசாரித்தனர். அப்போது, அரவிந்த் கொலை செய்யப்பட்டது அம்பலம் ஆனது. அவரது உடல் தென்காசி அருகே உள்ள பாட்டாகுறிச்சியில் ஒரு கல் குவாரி பகுதியில் உள்ள குட்டையில் கல்லை கட்டி வீசி இருந்ததும் தெரியவந்தது.

உடல் மீட்பு

இதையடுத்து பொன்னரசுவை அழைத்துக்கொண்டு தென்காசி போலீஸ் துணை சூப்பிரண்டு மணிமாறன், இன்ஸ்பெக்டர் பாலமுருகன், சப்- இன்ஸ்பெக்டர் மாதவன், தனிப்பிரிவு ஏட்டு முத்துராஜ் மற்றும் போலீசார் அவர் கூறிய இடத்திற்கு சென்றனர்.

அந்த இடத்தில் அரவிந்த் உடல் குவாரி தண்ணீரில் மூழ்கிக் கிடந்ததை கண்டுபிடித்தனர். அங்கிருந்து உடலை தீயணைப்புத்துறையினர் உதவியுடன் மீட்டனர். உடல் அழுகிய நிலையில் இருந்ததால் அதனை பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

திடுக்கிடும் தகவல்கள்

தொடர்ந்து நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
அரவிந்த் கார் டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். சமீபத்தில் அவர் சரியாக வேலைக்கு செல்லவில்லை என்று கூறப்படுகிறது.

மேலும் குடும்ப விஷயமாக மாலாவின் தாய் பொன் ராணிக்கும், அரவிந்திற்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு வந்தது. அரவிந்த் மீது மாமியார் பொன்ராணி கோபத்தில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

குத்திக்கொலை

இந்தநிலையில் கீழப்புலியூரை சேர்ந்த சீதாராமன், மணிகண்டன், தம்பிரான், பொன்னரசு ஆகியோர் விளாத்திகுளத்தில் இருந்த அரவிந்திற்கு போன் செய்து தென்காசியில் வேலை வாங்கி தருவதாக கூறி அழைத்துள்ளனர்.

ஏற்கனவே சீதாராமனிற்கும், அரவிந்திற்கும் இருந்த பழக்கத்தை வைத்து அவர் கூப்பிட்டதும் அரவிந்த் தென்காசி வந்துள்ளார். கடந்த 3-ந் தேதி தென்காசி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள ஒரு தனியார் தங்கும் விடுதியில் இவர்கள் தங்கி உள்ளனர். மறுநாள் (4-ந் தேதி) அதிகாலை அரவிந்தை ஒரு காரை ஓட்டச்சொல்லி கூறியுள்ளனர்.

கார் தென்காசியிலிருந்து கீழப்புலியூர் சென்று கொண்டிருந்தது. அங்கு 4 பேரும் அரவிந்தை காரில் வைத்து கத்தியால் குத்தி கொலை செய்துள்ளனர். பின்னர் உடலை பாட்டா குறிச்சி சாலையிலுள்ள கல்குவாரி குட்டையில் கல்லை கட்டி வீசிவிட்டு சென்றுவிட்டனர்.
மேற்கண்ட தகவல்கள் போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி பொன்னரசுவை கைது செய்தனர். இந்தநிலையில் கொலை தொடர்பாக சங்கரன்கோவில் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சீதாராமன், மணிகண்டன் ஆகியோர் சரண் அடைந்தனர். இந்த பயங்கர சம்பவம் தென்காசி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்