ஆம்பூரில் தனியார் வங்கியில் தீ விபத்து
ஆம்பூரில் தனியார் வங்கியில் ஏற்பட்ட தீ விபத்தில் நகை, பணம் எரிந்து நாசமானது.
ஆம்பூர்
ஆம்பூரில் தனியார் வங்கியில் ஏற்பட்ட தீ விபத்தில் நகை, பணம் எரிந்து நாசமானது.
வங்கியில் தீ விபத்து
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பைபாஸ் சாலையில் தனியார் கட்டிடத்தில் தனியார் வங்கி, ஏ.டி.எம். மையம், விற்பனை வரி அலுவலகம் ஆகியவை இயங்கி வருகிறது. இந்த நிலையில் நேற்று காலை 6 மணி அளவில் வங்கியில் இருந்து கரும்புகை வெளியேறுவதை அந்த வழியாக சென்ற சிலர் பார்த்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் உடனே இதுகுறித்து தீயணைப்பு துறையினர் மற்றும் வங்கி அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வங்கி மேலாளர் அபிஷேக் குமார், தீயணைப்பு துறையினர், ஆம்பூர் டவுன் போலீசார் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது வங்கியின் ஷட்டரை திறந்து உள்ளே செல்ல முயன்றனர். ஆனால் தீ கொழுந்து விட்டு எரிந்ததால் உள்ளே செல்ல இயலவில்லை. தகவலறிந்து வந்த மின்வாரிய அதிகாரிகள் வங்கியின் மின் இணைப்பை முழுமையாக துண்டித்தனர்.
நகை, பணம் எரிந்து நாசம்
தொடர்ந்து சுமார் ஒரு மணி நேரம் போராடி தீ அணைக்கப் பட்டது. இந்த தீ விபத்தில் பணம், நகைகள், ஆவணங்கள், எலக்ட்ரானிக் பொருட்கள் என பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானதாக கூறப்படுகிறது. இது குறித்து தகவலறிநத்தும் ஆம்பூர் எம்.எல்.ஏ. வில்வநாதன், மாவட்ட தீயணைப்பு உதவி அலுவலர் பழனி ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர்.
வங்கியில் பொருத்தப்பட்டிருந்த தீயணைப்பு அலாரம் செயல்படாததால் தீ அதிக அளவு பரவிய பின்னரே அனைவருக்கும் தெரிய வந்ததாக அங்கு இருந்தவர்கள் தெரிவித்தனர். தீயை உடனடியாக அணைத்ததால் அருகில் உள்ள ஏ.டி.எம். மையம், ஜெராக்ஸ் கடை, விற்பனை வரி அலுவலகத்திற்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டது. மேலும் தீ விபத்திற்கான காரணம் மற்றும் சேதம் குறித்து ஆம்பூர் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.