காங்கிரஸ் இல்லாத எதிர்க்கட்சி கூட்டணிக்கு சாத்தியம் இல்லை ராகுல் காந்தியை சந்தித்த பிறகு சஞ்சய் ராவத் பேட்டி
காங்கிரஸ் இல்லாத எதிர்க்கட்சி கூட்டணிக்கு சாத்தியம் இல்லை என்று ராகுல்காந்தியை சந்தித்த பிறகு சஞ்சய் ராவத் கூறினார்.
மும்பை,
காங்கிரஸ் இல்லாத எதிர்க்கட்சி கூட்டணிக்கு சாத்தியம் இல்லை என்று ராகுல்காந்தியை சந்தித்த பிறகு சஞ்சய் ராவத் கூறினார்.
மம்தா ஏற்படுத்திய பரபரப்பு
சமீபத்தில் மும்பைக்கு பயணம் மேற்கொண்ட திரிணமூல் காங்கிரஸ் கட்சி தலைவரும், மேற்கு வங்க முதல்-மந்திரியுமான மம்தா பானர்ஜி, காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சி கூட்டணிக்கு மாற்றாக தனி அணி உருவாக்கும் முயற்சியில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், சிவசேனா தலைவர்கள் ஆதித்ய தாக்கரே, சஞ்சய் ராவத் ஆகியோரை சந்தித்தார்.
அப்போது ஐக்கிய முற்போக்கு கூட்டணி குறித்து எழுப்பிய கேள்விக்கு, “ஐக்கிய முற்போக்கு கூட்டணி என்பதே இல்லை” என தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். அதுமட்டுமல்லாமல் ராகுல் காந்தியையும் அவர் விமர்சித்து பேசினார்.
ராகுல்காந்தியுடன் சந்திப்பு
இந்நிலையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை டெல்லியில் சிவசேனா கட்சியின் தலைமை செய்தித்தொடர்பாளர் சஞ்சய் ராவத் எம்.வி. நேற்று முன்தினம் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்புக்குப்பின் நிருபர்களிடம் சஞ்சய் ராவத் கூறியதாவது:-
ராகுல் காந்தியுடன் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி குறித்து ஆலோசித்தேன். அதன் விவரங்களை தற்போது தெரிவிக்க முடியாது. முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேயுடன் பேசிய பின் ஊடகங்களிடம் தெரிவிப்பேன்.
2024-ம் ஆண்டு மக்களவை தேர்தலில் பா.ஜனதாவை எதிர்க்க எதிர்க்கட்சிகளை ஒன்று சேர்க்கும் முயற்சி நடந்து வருகிறது. இதற்கான பணியை ராகுல் காந்தி முன்னெடுத்து செல்ல வேண்டும் என்று அவரிடம் நான் கேட்டுக்கொண்டேன்.
சாத்தியம் இல்லை
காங்கிரஸ் இல்லாமல் மற்ற எதிர்க்கட்சிகள் சேர்ந்து அமைக்கும் கூட்டணிக்கு சாத்தியம் இல்லை. 2 அல்லது 3 எதிர்க்கட்சி கூட்டணிகள் அமைத்து என்ன சாதிக்கப் போகிறோம். ஒரே ஒரு எதிர்க்கட்சி கூட்டணிதான் இருக்க வேண்டும். எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்தால்தான் பா.ஜனதாவுக்கு மாற்று அணியை உருவாக்க முடியும்.
இவ்வாறு சஞ்சய் ராவத் தெரிவித்தார்.
சஞ்சய் ராவத்தின் திட்டவட்டமான அறிவிப்பால், மம்தா பானர்ஜி தலைமையில் காங்கிரஸ் இல்லாமல் எதிர்க்கட்சி கூட்டணி அமைக்கும் முயற்சிக்கு சிவசேனா ஒத்துழைக்காது என்பது தெளிவாகிறது.