வெளிநாடுகளில் இருந்து வந்த 106 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு இல்லை

வெளிநாடுகளில் இருந்து வேலூர் மாவட்டத்துக்கு வந்த 106 பேருக்கும் ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு இல்லை என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Update: 2021-12-08 17:42 GMT
வேலூர்

வெளிநாடுகளில் இருந்து வேலூர் மாவட்டத்துக்கு வந்த 106 பேருக்கும் ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு இல்லை என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஒமைக்ரான் வைரஸ்

தென்ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் வைரஸ் உலகை அச்சுறுத்த தொடங்கி உள்ளது. இந்தியாவில் ஒமைக்ரான் வைரஸ் பரவலை தடுக்க மத்திய அரசு தீவிர முன்எச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகிறது. குறிப்பாக வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வரும் அனைவருக்கும் விமான நிலையத்தில் தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. பின்னர் அவர்கள் பரிசோதனை முடிவு வரும்வரை தனிமைப்படுத்தப்படுகிறார்கள்.

வேலூர் மாவட்டத்தில் ஒமைக்ரான் வைரஸ் பரவலை தடுக்க மாநில எல்லையோரம் மற்றும் தேசிய நெடுஞ்சாலை பகுதிகளில் உள்ள ஓட்டல்கள், தங்கும் விடுதிகளில் கொரோனா தடுப்பு விதிகளை கடைப்பிடிக்கும்படி மாவட்ட நிர்வாகம் சார்பில் அதன் உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் பிறமாநிலங்களில் இருந்து வேலூர் மாவட்டத்துக்கு வருபவர்கள் தொற்று இல்லை என்று சான்றிதழ் காண்பித்த பின்னரே தங்கும் விடுதியில் அறை வழங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
 வெளிநாடுகளில் இருந்து வேலூர் மாவட்டத்துக்கு வந்தவர்களுக்கு ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்படவில்லை.

106 பேருக்கு பாதிப்பு இல்லை

இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், வெளிநாடுகளில் இருந்து வேலூர் மாவட்டத்துக்கு கடந்த 30-ந் தேதி முதல் நேற்று முன்தினம் வரை 106 பேர் வந்துள்ளனர். அவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு இல்லை. ஆனாலும் அவர்கள் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக 7 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.

8 நாளில் அவர்களுக்கு மீண்டும் தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, அவற்றில் கொரோனா இல்லை என்று வந்தால் மட்டுமே வெளியே செல்ல அனுமதிக்கப்படுவார்கள். வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் வீடு மற்றும் தங்கும் விடுதியை விட்டு வெளியே வராமல் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் அவர்களை உள்ளாட்சி அமைப்பினர் கண்காணிக்கும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்