கூடுதல் பஸ்கள் இயக்கக்கோரி பள்ளி மாணவ-மாணவிகள் சாலை மறியல் மூங்கில்துறைப்பட்டு அருகே பரபரப்பு
மூங்கில்துறைப்பட்டு அருகே பள்ளி நேரத்தில் கூடுதல் பஸ்கள் இயக்கக்கோரி மாணவ-மாணவிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
மூங்கில்துறைப்பட்டு,
மாதிரி பள்ளி
மூங்கில்துறைப்பட்டு அருகே மூலக்காடு கிராமத்தில் அரசு மாதிரி பள்ளி உள்ளது. 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள இந்த பள்ளியில் மூங்கில்துறைப்பட்டு மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கல்வி பயின்று வருகிறார்கள். இவர்கள் பள்ளிக்கு வந்து செல்ல பள்ளி நேரத்துக்கு போதிய பஸ்கள் இயக்கப்படவில்லை. இதனால் மாணவ-மாணவிகள் காலை, மாலை நேரங்களில் கூட்ட நெரிசலுடன் பெரும் சிரமங்களுக்கு இடையே பஸ்சில் பயணம் மேற் கொண்டு வந்தனர். மேலும் மாணவர்கள் குறிப்பிட்ட நேரத்துக்கு பள்ளிக்கு வந்து செல்ல முடியாமலும் தவித்தனர்.
போலீசார் பேச்சுவார்த்தை
இதனால் பாதிக்கப்பட்ட மாதிரி பள்ளி மாணவ-மாணவிகள் நேற்று காலை 10 மணிக்கு பள்ளி அருகே உள்ள சேராப்பட்டு சாலையில் ஒன்று திரண்டதோடு, பள்ளி நேரத்தில் கூடுதல் பஸ்கள் இயக்க வலியுறுத்தி திடீரென சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதுபற்றி தகவல் அறிந்ததும் வடபொன்பரப்பி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குர்ஷித்பாஷா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
போக்குவரத்து பாதிப்பு
அப்போது மாணவர்கள், பள்ளி நேரத்துக்கு போதிய பஸ் வசதி இல்லாததால், குறிப்பிட்ட நேரத்துக்கு பள்ளிக்கு வந்து செல்ல முடியவில்லை. இதனால் கல்வி பயில்வதில் சிக்கல் ஏற்படுகிறது. ஆகவே பள்ளி நேரத்தில் கூடுதல் பஸ்களை இயக்கவேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதனை ஏற்ற போலீசார், இதுபற்றி போக்குவரத்துக்கழக அதிகாரிகளிடம் பேசி கூடுதல் பஸ் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதையடுத்து மாணவர்கள் மறியலை கைவிட்டு, அங்கிருந்து வகுப்பறைகளுக்கு சென்றனர். இந்த சம்பவத்தால் சேராப்பட்டு சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.