2-ம் நிலை காவலர்களுக்கான தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனை தொடக்கம்

2-ம் நிலை காவலர்களுக்கான தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனை தொடங்கி நடந்தது.;

Update: 2021-12-08 16:38 GMT
கடலூர்,

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தால் காவல்துறை, சிறைத்துறை மற்றும் தீயணைப்புத்துறை ஆகிய துறைகளுக்கான 2-ம் நிலை காவலர்களுக்கான எழுத்து தேர்வு கடந்த ஆண்டு டிசம்பர் 13-ந்தேதி முடிந்த நிலையில், உடற்தகுதி தேர்வு கடந்த ஜூலை மாதம் தொடங்கி ஆகஸ்டு மாதம் வரை கடலூர் அண்ணா விளையாட்டு மைதானத்தில் நடந்தது.

இதில் ஆண்கள், பெண்கள் என 435 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு நேற்று முன்தினம் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கைரேகை சோதனை கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் உள்ள காவலர் பயிற்சி பள்ளி கட்டிடத்தில் நடந்தது.

 இதில் 269 ஆண்கள், 166 பெண்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு தனித்தனியாக சான்றிதழ். கைரேகை பரிசோதனை நடந்தது. இதில் அனைவரும் தேர்வு செய்யப்பட்டனர்.

மருத்துவ பரிசோதனை

தொடர்ந்து அவர்களுக்கு குழு, குழுவாக வரவழைத்து மருத்துவ பரிசோதனை நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று 80 பேர் கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு மருத்துவ பரிசோதனைக்காக வந்தனர். 

பின்னர் அவர்களுக்கு இருதய பரிசோதனை, எக்ஸ்ரே பரிசோதனை, எலும்பு சம்பந்தமான பரிசோதனை என முழு உடல் தகுதி சோதனை தொடங்கி நடைபெற்றது.

இந்த பரிசோதனை முடிந்த நபர்களுக்கு இன்று (வியாழக்கிழமை) கண் பரிசோதனை நடக்கிறது. இவ்வாறு குழுவாக 435 பேருக்கும் மருத்துவ பரிசோதனை நடக்கிறது. இந்த பரிசோதனையில் தேர்ச்சி பெறுவோர் 2-ம் நிலை காவலராக தேர்வு செய்யப்பட்டு பயிற்சிக்கு செல்வார்கள் என்று போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்