கோலியனூர் ஒன்றியத்தில் 907 பேருக்கு ரூ.8¼ கோடியில் நலத்திட்ட உதவிகள்
கோலியனூர் ஒன்றியத்தில் 907 பேருக்கு ரூ.8¼ கோடியில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் பொன்முடி வழங்கினார்.;
விழுப்புரம்,
விழுப்புரம் சட்டமன்ற தொகுதி கோலியனூர் ஊராட்சி ஒன்றியத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று விழுப்புரம் மகாராஜபுரத்தில் நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட கலெக்டர் டி.மோகன் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் டாக்டர் ஆர்.லட்சுமணன், நா.புகழேந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி கலந்துகொண்டு இலவச வீட்டுமனைப்பட்டா, முதியோர் ஓய்வூதியம், புதிய மின்னணு ரேஷன் கார்டு, வேளாண் உபகரணங்கள், பிரதம மந்திரியின் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் வீடு, சலவைப்பெட்டி, இலவச தையல் எந்திரம், மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலிகள் என பல்வேறு துறைகளின் சார்பில் ஏழை, எளிய மக்கள் 907 பேருக்கு ரூ.8 கோடியே 20 லட்சத்து 93 ஆயிரத்து 867 மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-
தடுப்பூசி செலுத்த அறிவுரை
தமிழக மக்களின் நலன் கருதி கொரோனா தொற்றினால் இறந்தவர்களின் குடும்ப வாரிசுதாரர்களுக்கு ரூ.50 ஆயிரம் வழங்கப்படும் என்ற அரசாணையை தற்போது முதல்-அமைச்சர் வெளியிட்டுள்ளார். அதன்படி விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்த 357 பேரின் குடும்ப வாரிசுதாரர்களுக்கு இக்கருணை தொகை வழங்கப்படும். மேலும் தமிழக முதல்-அமைச்சரின் அறிவுறுத்தலின்படி மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்கி பொதுமக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டு கொரோனா, ஒமைக்ரான் போன்ற வைரஸ் தொற்றிலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.