ஆண்டிப்பட்டி அருகே சாலையில் குளம்போல் தேங்கி நிற்கும் மழைநீர்

ஆண்டிப்பட்டி அருகே சாலையில் குளம்போல் தேங்கி நிற்கும் மழைநீரால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

Update: 2021-12-08 16:10 GMT
ஆண்டிப்பட்டி:
ஆண்டிப்பட்டி அருகே உள்ள நாச்சியார்புரம் கிராமத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்தநிலையில் கடந்த வாரம் நாச்சியார்புரத்தில் கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் அந்த கிராமத்திற்கு செல்லும் சாலையில் சுமார் 200 மீட்டர் தூரத்திற்கு மழைநீர் குளம்போல் தேங்கியது. போதுமான வடிகால் வசதி இல்லாததால் தண்ணீர் வெளியேற வழியின்றி சாலையில் தேங்கியது. 
ஒருவாரமாகியும் சாலையில் தேங்கிய தண்ணீர் வடியவில்லை. இதனால் நாச்சியார்புரம் கிராமத்தை சேர்ந்த மக்கள் அவதியடைந்து வருகிறது. அந்த சாலையின் வழியாக நடந்தும், வாகனங்களில் ஊர்ந்தும் பொதுமக்கள் சென்று வருகின்றனர். சாலையில் தேங்கிய மழைநீரை அப்புறப்படுத்த வேண்டும் என்று இப்பகுதி மக்கள் அரசு அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தனர். 
ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகுிறது. எனவே சாலையில் தேங்கியுள்ள மழைநீரை உடனடியாக அப்புறப்படுத்துவதுடன், இனிவரும் காலங்களில் தண்ணீர் தேங்காதவாறு போதுமான வடிகால் வசதி செய்ய வேண்டும் என்றும் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்