தேனி அருகே அரிவாளை வீசி பஸ் கண்ணாடி உடைப்பு; தொழிலாளிக்கு போலீஸ் வலைவீச்சு

தேனி அருகே தனியார் பஸ் மீது அரிவாளை வீசிய கண்ணாடியை உடைத்த தொழிலாளியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2021-12-08 15:45 GMT
தேனி:
தேனி அருகே தனியார் பஸ் மீது அரிவாளை வீசிய கண்ணாடியை உடைத்த தொழிலாளியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். 
அரிவாள் வீச்சு
தமிழக-கேரள எல்லையான குமுளியில் இருந்து குச்சனூர் வழியாக தேனி நோக்கி ஒரு தனியார் பஸ் நேற்று மாலை வந்து கொண்டிருந்தது. இந்த பஸ்சை, கம்பம் அருகே உள்ள க.புதுப்பட்டியை சேர்ந்த சாம் (வயது 25) ஓட்டி வந்தார்.
போடேந்திரபுரம் அருகே வந்தபோது பஸ்சுக்கு முன்னால் மோட்டார் சைக்கிளில் ஒருவர் சென்று கொண்டு இருந்தார். அவர் பஸ்சுக்கு வழிவிடாமல் சென்றார். முத்துத்தேவன்பட்டிக்கு பஸ் வந்த போது, மோட்டார் சைக்கிளில் வந்த நபரிடம் பஸ் டிரைவர் தட்டிக்கேட்டார். அதற்கு அவர் வாக்குவாதம் செய்தார். 
பின்னர் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு் சென்ற அந்த அவர், போடி விலக்கு அருகில் உள்ள இளநீர் கடைக்கு சென்று அரிவாளை எடுத்து சாலையில் நின்று கொண்டு இருந்தார். பஸ் போடி விலக்கு பகுதியில் வந்த போது அந்த அரிவாளை அவர் பஸ் மீது வீசினார். இதில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி உடைந்தது. 
தொழிலாளிக்கு வலைவீச்சு
அப்போது பஸ்சில் இருந்த பயணிகள் பயத்தில் அலறினர். இதையடுத்து அந்த நபரை சாம் மற்றும் சிலர் பிடிக்க முயன்ற போது அவர் மீண்டும் இளநீர் கடைக்கு சென்று அரிவாளை எடுத்து தாக்க முயன்றார்.
இதையடுத்து அவரை சிலர் மடக்கிப் பிடித்தனர். ஆனால், அந்த நபர் அவர்களின் பிடியில் இருந்து விலகி, மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார். 
இதுகுறித்து பஸ் டிரைவர் சாம், பழனிசெட்டிபட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அசோக் இதுதொடர்பாக விசாரணை நடத்தினார். விசாரணையில், பஸ் மீது அரிவாள் வீசிய நபர் முத்துத்தேவன்பட்டியை சேர்ந்த 45 வயது நபர் என்பதும், அவர் கூலி வேலை செய்து வருவதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்