சாலையை சீரமைத்து தரக்கோரி மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மீது ஏறி புகைப்படக்காரர் போராட்டம்-போச்சம்பள்ளியில் பரபரப்பு

போச்சம்பள்ளியில் சாலையை சீரமைத்து தரக்கோரி மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மேல் ஏறி புகைப்படக்காரர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2021-12-08 14:38 GMT
மத்தூர்:
சேறும், சகதியுமான சாலை
போச்சம்பள்ளியை அடுத்த சின்னபாரண்டபள்ளி கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் சுற்று வட்டாரத்தை சேர்ந்த 70-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளிக்கு செல்லும் சாலை பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் உள்ளது. 
தற்போது அந்த பகுதியில் பெய்த மழை காரணமாக சாலை சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது. இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் சாலையை பயன்படுத்த முடியாமல் மாணவ-மாணவிகளும், பொதுமக்களும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகிறார்கள்.
போராட்டம்
இந்தநிலையில் சின்னபாரண்டபள்ளியை சேர்ந்த புகைப்படக்காரரான பட்டாபிராமன் (வயது 42) என்பவர் சாலையை சீரமைக்க வலியுறுத்தி அங்குள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மீது ஏறி திடீரென போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அப்போது அவர் ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து கோஷங்களை எழுப்பினார். 
இதுகுறித்து தகவல் அறிந்த போச்சம்பள்ளி தாசில்தார் இளங்கோ மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட பட்டாபிராமனிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து சாலையை சீரமைத்து தருவதாக உறுதி அளித்தனர். இதையடுத்து ஒரு மணி நேர போராட்டத்துக்கு பிறகு அவர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து இறங்கி வந்தார். 

மேலும் செய்திகள்