ரூ.13 லட்சம் மோசடி செய்த வாலிபர் கைது
தனியார் மதுபானகூடம் வைப்பதாக கூறி ரூ.13 லட்சம் மோசடி செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.;
மதுரை,
தனியார் மதுபானகூடம் வைப்பதாக கூறி ரூ.13 லட்சம் மோசடி செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
மதுபானகூடம்
மதுரை நாகமலைபுதுக்கோட்டை என்.ஜி.ஓ.காலனியை சேர்ந்தவர் அய்யனார் (வயது 40), அங்குள்ள மதுக்கடையில் விற்பனையாளராக வேலை பார்த்து வருகிறார். இவரிடம் மதுரை தெற்குமாட வீதியை சேர்ந்த தனியார் வங்கியில் நகை மதிப்பீட்டளராக வேலை பார்க்கும் சதீஸ்வரன் அறிமுகம் ஆனார். அவர் தனக்கு தெரிந்தவர்கள் தனியார் மனமகிழ்மன்றம் என்னும் தனியார் மதுபானக்கூடம் வைக்க உள்ளனர். அவர்களுக்கு இந்த தொழில் அனுபவம் உள்ள ஒருவருடன் சேர்ந்து புதிதாக ஒத்தக்கடையில் மதுபானக் கூடம் தொடங்கலாம் என்று கூறியுள்ளனர். எனவே நீங்கள் அதில் பங்குதாரராக சேர விரும்பம் இருந்தால் கூறவும் என்று கேட்டுள்ளார்.
ரூ.1 கோடி
பின்னர் அய்யனார், சதீஸ்வரன், எல்லீஸ்நகர் வ.உ.சி. தெருவை சேர்ந்த பாலசுப்பிரமணியன் (34), பாலமுருகன் உள்ளிட்ட 5 பேர் சேர்ந்து ஒரு கோடி ரூபாயில் தொழில் தொடங்க திட்டமிட்டனர். அதன்படி ஒவ்வொரு பங்குதாரரும் 20 லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.
அய்யனாரும் அதை நம்பி 13 லட்சம் ரூபாயை முதல் தவணையாக தனது பங்காக கொடுத்துள்ளார். அதன் மூலம் ஒத்தக்கடையில் கடை தொடங்குதவற்கான பணிகளை செய்து வந்தனர். இந்த நிலையில் பங்குதாரர் பாலசுப்பிரமணியால் பணத்தை கொடுக்க முடியததால் அந்த கடையை அய்யானருக்கு தெரியாமல் வேறு ஒருவருக்கு மாற்றி விற்று விட்டார்.
கைது
எனவே தான் கொடுத்த பணத்தை அய்யனார் அவர்களிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர்கள் பணத்தை கொடுக்காமல் அவருக்கு மிரட்டல் விடுத்தனர். இது குறித்து அய்யனார் மதுரை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலசுப்பிரமணியனை கைது செய்தனர். மேலும் பாலமுருகன், சதீஸ்வரன் ஆகியோரை தேடி வருகிறார்கள்.