பாகிஸ்தான் போர்க்கப்பல்களை தாக்கி மூழ்கடித்த கடற்படை பிரிவுக்கு ஜனாதிபதி கவுரவம்

பாகிஸ்தான் போரில் அந்த நாட்டு போர்க்கப்பல்களை குண்டு வீசி தாக்கி மூழ்கடித்த கடற்படை பிரிவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கவுரவம் வழங்கினார்.

Update: 2021-12-08 14:01 GMT
படம்
மும்பை, 

பாகிஸ்தான் போரில் அந்த நாட்டு போர்க்கப்பல்களை குண்டு வீசி தாக்கி மூழ்கடித்த கடற்படை பிரிவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கவுரவம் வழங்கினார். 

 கில்லர் படை

இந்திய கடற்படையில் 22-வது ஏவுகணை கப்பல் படை மும்பை கடற்படை தளத்தை மையமாக கொண்டு செயல்பட்டு வருகிறது.  இந்த படைப்பிரிவு 1991-ம் ஆண்டு அதிகாரப்பூர்வமாக உருவாக்கப்பட்டாலும், கடந்த 50 ஆண்டுகளாக கடற்படையில் பணியாற்றி வருகிறது. குறிப்பாக இந்த படைப்பிரிவு 1971-ம் ஆண்டு பாகிஸ்தான் போரில் அந்த நாட்டு கப்பல்களை குண்டுகளை வீசி மூழ்கடித்தது. எனவே இது ‘கில்லர் படை’ என்றும் அழைக்கப்படுகிறது. 

இந்த படையின் அளப்பரிய பணியை பாராட்டி அதற்கு ‘ஜனாதிபதி ஸ்டான்டர்டு’ என்ற கவுரவம் வழங்கும் நிகழ்ச்சி மும்பை கடற்படை தளத்தில் நேற்று காலை நடந்தது. இதில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கலந்து கொண்டு, அந்த ஏவுகணை கப்பல் படை வீரர்களிடம் கொடியை வழங்கி ‘ஜனாதிபதி ஸ்டான்டர்டு’ கவுரவத்தை வழங்கினார். இதுபோன்ற கவுரவும் வழங்கப்படுவது மிகவும் அரிதான ஒன்றாக கருதப்படுகிறது. 
விழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பேசியதாவது:-

பாதுகாப்பு கூட்டாளி
இந்திய கடற்படை நமது கடல் எல்லைகளை காப்பது மட்டுமின்றி, அண்டை கடற்சார் நாடுகளின் பாதுகாப்பு கூட்டாளியாகவும் விளங்குகிறது. நமது நாடு ஒரு கடற்சார் தேசம். நமது வெளியுறவு கொள்கைகளை முன்னேற்றுவதிலும், தேசிய நலன்கள் மற்றும் வர்த்தக பாதுகாப்பிலும் கடற்படை பெரும் பங்காற்றி வருகிறது. உலகளாவிய கடல் வர்த்தகத்தில் பெரும் பங்கு இந்திய பெருங்கடல் பகுதி வழியாகவே நடைபெறுகிறது. எனவே உலக வர்த்தக பாதுகாப்பு கவசமாக நமது கடற்படை திகழ்கிறது. இந்த தருணத்தில் 22-வது ஏவுகணை கப்பல் படைக்கு கிடைத்த அங்கீகாரம் பெருமிதம் அளிக்கிறது. 
இவ்வாறு அவர் பேசினார். 

மேலும் செய்திகள்