‘தினத்தந்தி’ புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
புகார் பெட்டி செய்தி எதிரொலி;
பள்ளம் சீரமைக்கப்பட்டது
தூத்துக்குடி மாவட்டம் வசவப்பபுரம் கிராமத்தை சேர்ந்தவர் எம்.கணேசன். இவர், நெல்லை- தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் வசவப்பபுரம் பஸ்நிறுத்தம் அமைந்துள்ள சர்வீஸ் ரோட்டில் மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் மெயின் ரோட்டிலேயே பயணிகளை இறக்கி விடுவதாகவும் அனுப்பிய பதிவு ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் செய்தியாக பிரசுரமானது. அதன் எதிரொலியாக அங்கு பள்ளம் சீரமைக்கப்பட்டுள்ளது. இதற்கு உறுதுணையாக இருந்த ‘தினத்தந்தி’க்கும், அதிகாரிகளுக்கும் அவர் நன்றியையும், பாராட்டையும் தெரிவித்துள்ளார்.
வாறுகால் பாலம் சரிசெய்யப்படுமா?
பாளையங்கோட்டை மண்டலம் 12-வது வார்டு கக்கன் நகர் வள்ளுவர் தெருவில் சிறிய வாறுகால் பாலம் பழுதடைந்து கடந்த ஒரு வருடமாக அப்படியே கிடக்கிறது. இதனால் குழந்தைகள், முதியவர்கள் நடமாடுவதற்கு சிரமமாக உள்ளது. எனவே, அதனை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
முருகன், கக்கன்நகர்.
குளம்போல் தேங்கி கிடக்கும் மழைநீர்
நெல்லையில் இருந்து தூத்துக்குடி- திருச்செந்தூர் செல்லும் வழியில் ரகுமத்நகர்- சீனிவாசநகர் பிரிவு சாலையில் வடிகால் வசதி இல்லாத காரணத்தால் மழைநீர் குளம் போல் தேங்கி கிடக்கிறது. இதனால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, மழைநீரை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கே.சந்திரசேகரன், கயத்தாறு.
நிற்காமல் செல்லும் எஸ்.எப்.எஸ். பஸ்கள்
சேரன்மாதேவி- வீரவநல்லூர் சாலையில் உள்ள புதுக்குடி கிராம பஸ்நிறுத்தத்தில் எஸ்.எப்.எஸ். பஸ்கள் நின்று செல்ல அரசு அனுமதி ஆணை உள்ளது. ஆனால் அங்கு எஸ்.எப்.எஸ். பஸ்கள் நிற்பதில்லை. இதனால் கிராம மக்கள் பெரிதும் அவதிப்படுகிறார்கள். எனவே, புதுக்குடி கிராமத்தில் எஸ்.எப்.எஸ். பஸ்கள் நின்று செல்ல சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.
அய்யப்பன், புதுக்குடி.
குடிநீர் தட்டுப்பாடு
தென்காசி மாவட்டம் கடையம் யூனியன் முதலியார்பட்டி பஞ்சாயத்து முதலியார்பட்டி, காந்திநகர், இந்திராநகர் பகுதிகளில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இங்கு வாரத்துக்கு ஒரு நாள் மட்டும் தாமிரபரணி ஆற்று குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. தற்போது கடந்த 6 மாதங்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் குடிநீர் கிடைக்காமல் மக்கள் அவதிப்படுகின்றனர். எனவே, குடிநீர் தட்டுப்பாட்டை போக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன்.
கோதர் மைதீன், முதலியார்பட்டி.
சேறும் சகதியுமாக மாறிய தெரு
குருவிகுளம் யூனியனுக்கு உட்பட்ட முக்கூட்டுமலை கிராமத்தில் சிவன் கோவில் தெருவில் சரியான சாலை வசதி இல்லை. இதனால் மழைநீர் தேங்கி சேறும் சகதியுமாக கிடப்பதால் பொதுமக்கள் சிரமப்படுகிறார்கள். இதனை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விவேகானந்தன், முக்கூட்டுமலை.
குண்டும் குழியுமான சாலை
பாவூர்சத்திரம் அருகே உள்ள திப்பணம்பட்டி முதல் அரியப்புரம் வரையுள்ள தார் சாலையானது, தற்போது பெய்த மழையில் உருக்குலைந்து குண்டும் குழியுமாக கிடக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துக்கு உள்ளாகின்றனர். எனவே சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வி.தங்கம் தென்னரசு, சென்னல்தாபுதுக்குளம்.
ஆபத்தான மின்கம்பம்
குருவிகுளம் யூனியன் இளையரசனேந்தல் பஞ்சாயத்துக்கு உட்பட்ட கீழூர் பள்ளிக்கூட தெருவில் 2 மின்கம்பங்களில் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகிறது. எனவே, இந்த ஆபத்தான மின்கம்பங்களை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக் ெகாள்கிறேன்.
பீ.நீதிமணி, இளையரசனேந்தல்.
சாலையில் சுற்றித்திரியும் மாடுகள்
தூத்துக்குடியில் இருந்து ஸ்ரீவைகுண்டம் செல்லும் வழியில் பேட்மாநகரத்தில் சாலையில் மாடுகள் சுற்றித் திரிகின்றன. இதனால் விபத்துகள் ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது. எனவே, மாடுகளை பிடித்துச் செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன்.
அபுபக்கர், சித்திக், பேட்மாநகரம்.
சிமெண்டு ரோடு
ஆழ்வார்திருநகரி யூனியன் மேல வெள்ளமடம் பஞ்சாயத்து முத்துநகரில் பல வருடங்களாக சிமெண்டு ரோடு சேதம் அடைந்து குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதனால் ஆங்காங்கே மழைநீர் தேங்கி கிடக்கிறது. எனவே, புதிதாக சிமெண்டு ரோடு அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எஸ்.அம்மமுத்து, மேல வெள்ளமடம்.