பயனற்று கிடக்கும் நீர்தேக்க தொட்டியை இடித்து அகற்ற வேண்டும்
கூடலூர் அரசு பள்ளியில் பயனற்று கிடக்கும் நீர்தேக்க தொட்டியை அகற்ற வேண்டும் என்று மாணவர்கள், பெற்றோர் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
கூடலூர்
கூடலூர் அரசு பள்ளியில் பயனற்று கிடக்கும் நீர்தேக்க தொட்டியை அகற்ற வேண்டும் என்று மாணவர்கள், பெற்றோர் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
அரசு பள்ளி
நீலகிரி மாவட்டம் கூடலூர் 1-ம் மைல் பகுதியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 400-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் அந்த பள்ளி வளாகத்துக்குள் சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக தரைத்தள குடிநீர் தேக்க தொட்டி எந்தவித பயனும் இன்றி காணப்படுகிறது.
பள்ளி வளாகத்தின் பெரும்பகுதியை குடிநீர் தேக்க தொட்டி ஆக்கிரமித்துள்ளது. இதனால் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் கட்ட முடியாத நிலை தொடர்ந்து காணப்படுகிறது.
கூடுதல் வகுப்பறைக்கு இடமில்லை
இதை கருத்தில் கொண்டு எந்தவித பயனும் இல்லாத நிலையில் காணப்படும் நீர் தேக்க தொட்டியை இடித்து அகற்ற வேண்டும் என்று மாணவர்கள், பெற்றோர் நீண்டகாலமாக வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதற்கிடையில் கூடலூர் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் அந்த பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் கட்டுவதற்கு ஆய்வு நடத்தினர்.
ஆனால் போதிய இடவசதி இல்லாததால் கட்டிடங்கள் கட்டும் திட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைத்து உள்ளனர். இதனால் யாருக்கும் பயன் இல்லாத நீர்தேக்க தொட்டியை உடனடியாக அகற்ற வேண்டும். இல்லையெனில் போராட்டம் நடத்தப்படும் என்று மாணவர்களின் பெற்றோர் தெரிவித்து உள்ளனர்.
இடித்து அகற்ற வேண்டும்
இதுகுறித்து மாணவர்களின் பெற்றோர் கூறியதாவது:-
கடந்த 2016-ம் ஆண்டுக்கு முன்பு வரை அந்த பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை 150 ஆக இருந்தது. பின்னர் ஆசிரியர்களின் தொடர் நடவடிக்கை காரணமாக மாணவர்களின் எண்ணிக்கை 420 ஆக உயர்ந்தது. ஆனால் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் இல்லை.
இதன் காரணமாக மாணவர்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே பள்ளி வளாகத்தில் யாருக்கும் பயனில்லாமல் உள்ள நீர் தேக்க தொட்டியை இடித்து அகற்றிவிட்டு கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் கட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.