நகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
புதிய பாலம் கட்டுமான பணியை தொடங்கக்கோரி நகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் கூடலூரில் பரபரப்பு ஏற்பட்டது.
கூடலூர்
புதிய பாலம் கட்டுமான பணியை தொடங்கக்கோரி நகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் கூடலூரில் பரபரப்பு ஏற்பட்டது.
மழையால் பாலம் உடைந்தது
நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பெய்த பலத்த மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக பல்வேறு இடங்களில் பாலங்கள் உடைந்தன. அதில், கூடலூர் 1-ம் மைல் கோல்டன் அவென்யூக்கு செல்லும் சாலையின் குறுக்கே கட்டப்பட்டு இருந்த பாலமும் அடங்கும்.
இதனால் பொதுமக்கள் தங்களது வீடுகளுக்கு செல்ல முடியாமல் தற்காலிகமாக தனியார் நிலம் வழியாக சென்று வருகின்றனர். இதனால் பாலத்தை புதுப்பிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். இதை ஏற்று அங்கு அதிகாரிகளும் ஆய்வு நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்திருந்தனர். பின்னர் நகராட்சி மூலம் புதிய பாலம் கட்டுவதற்கான பணி ஒப்பந்தமும் விடப்பட்டது.
பொதுமக்கள் முற்றுகை
இதற்கிடையில் நகராட்சியில் விடப்பட்ட பணி ஒப்பந்தங்களில் விதிமுறைகள் மீறப்பட்டு உள்ளதாக நீதிமன்றத்தில் ஒப்பந்ததாரர் ஒருவர் தொடுத்த வழக்கில் தடை ஆணை வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதன் கீழ் கோல்டன் அவென்யூ பகுதியில் புதிய பாலம் கட்டுவதற்கு தடை ஏற்பட்டு உள்ளது. இதை அறிந்த அப்பகுதி பொதுமக்கள் புதிய பாலம் கட்டும் பணியை தொடங்கக்கோரி நேற்று காலை 10.30 மணிக்கு கூடலூர் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அப்போது அவர்களிடம், அலுவலகத்தில் இருந்த நகராட்சி ஆணையாளர் ராஜேஷ்வரன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில், உயர் அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்று சிறப்பு அனுமதி பெற்று கோல்டன் அவென்யூ பகுதியில் புதிய பாலம் கட்டுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். பல கட்டமாக நடத்திய பேச்சுவார்த்தையின் முடிவில் பொதுமக்கள் அவரது உறுதியை ஏற்று கொண்டு கலைந்து சென்றனர்.
உண்ணாவிரத போராட்டம்
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-
எங்கள் பகுதியில் உள்ள பாலம் உடைந்து 2 ஆண்டுகள் ஆகிறது. தொடர்ந்து வலியுறுத்தியதனஙபேரில் புதிய பாலம் கட்டுவதற்கான நடவடிக்கையை அதிகாரிகள் மேற்கொண்ட சமயத்தில் நீதிமன்றத்தில் அரசியல் காரணங்களுக்காக ஒப்பந்ததாரர் ஒருவர் தடை ஆணை பெற்று உள்ளார்.
தற்போது நகராட்சி நிர்வாகம் புதிய பாலம் கட்ட நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளது. தவறும் சமயத்தில் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.