குடியிருப்பு பகுதியில் தேங்கி நிற்கும் மழைநீர்

குடியிருப்பு பகுதியில் தேங்கி நிற்கும் மழைநீர்;

Update: 2021-12-08 12:46 GMT
உடுமலை அருகே  குடியிருப்பு பகுதிகளில் மழைத்தண்ணீர் வடியாமல் குளம்போன்று தேங்கி நிற்பதால் பொதுமக்கள் அவதிப்படுகிறார்கள். 
மழைநீர்
உடுமலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு பலத்த மழை கொட்டியது. அதனால் உடுமலை நகராட்சி பகுதி, மற்றும் ஊராட்சி பகுதிகளில் மழைத்தண்ணீர் வீடுகளுக்குள் புகுந்தது. மழை நின்றபிறகும் சிலகுடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் வடியாமல் குளம்போன்று தேங்கி நிற்கிறது. அது போல் கணக்கம்பாளையம் ஊராட்சி குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் தேங்கி நின்றது. இதனால் ஆங்காங்கு கால்வாய் போன்று பள்ளம்பறித்து தண்ணீர் வழிந்து செல்லும் வகையில் பணி மேற்கொள்ளப்பட்டன. இதனால் அந்த வழியாக செல்லும் மினி பஸ் வேறு சாலையில் திருப்பிவிடப்பட்டுள்ளது. அத்துடன் ஜீவாநகர் பகுதியில் சாலையில் பள்ளம் பறிக்கப்பட்டுள்ளதால் அந்த வழியாக இருசக்கர வாகனங்களும் செல்வதில்லை.
மழை நின்ற பிறகும் ஜீவாநகர், ராயல்லட்சுமி நகர், குப்பண்ணகவுண்டர் சுஜன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழைத்தண்ணீர் வடியாமல் குளம்போன்று தேங்கி நிற்கிறது.அதனால் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
கோரிக்கை
எனவே  தேங்கி நிற்கும் தண்ணீரை அப்புறப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த நிலையில் குப்பண்ணகவுண்டர் லே-அவுட் சுஜன் நகரை சேர்ந்த பொதுமக்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு வந்து, மழைநீர் வடிகால் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி வட்டார வளர்ச்சி அதிகாரியிடம் மனு கொடுத்தனர்.

மேலும் செய்திகள்