ஆவணங்கள் சரிபார்க்கப்பட் பின்னர் 100 ஏற்றுமதி நிறுவனங்கள் விடுவிக்கப்பட்டுள்ளன என்று கோவை ஜி.எஸ்.டி. வரித்துறை முதன்மை கமிஷனர் கூறினார்.
சிறப்பு சரிபார்ப்பு முகாம்
மத்திய அரசு வழங்கும் சலுகைகளை பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் சிலர் தவறாக பயன்படுத்துவதை தவிர்க்க கலால் மற்றும் சரக்கு சேவை வரித்துறை சார்பில் ஆவணங்களை சரிபார்க்கும் வகையில் சிறப்பு சரிபார்ப்பு முகாம் நடந்த 6-ந் தேதி முதல் 17ந் தேதி வரை திருப்பூர் கோட்ட அலுவலகங்களில் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் திருப்பூர் ஏற்றுதியாளர்கள் சங்க அலுவலக கூட்ட அரங்கில் சிறப்பு சரிபார்ப்பு முகாம் குறித்த ஏற்றுமதியாளர்கள் சந்திப்பு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் கோவை மத்திய கலால் மற்றும் சரக்கு சேவை வரித்துறை முதன்மை கமிஷனர் குமார் பேசியதாவது
இந்தியாவில் ஜவுளித்துறை என்பது அதிகமானவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் துறையாக உள்ளது. சமீபகாலமாக மூலப்பொருட்கள் விலை உயர்வு, சரக்குகளை அனுப்பும் கண்டெய்னர் பெட்டிகள் வாடகை அதிகரிப்பு உள்ளிட்ட பிரச்சினைகளை தாண்டி சிரமத்தை எதிர்த்து பின்னலாடைத்துறையினர் முன்னேறி வருகிறார்கள். அரசு வழங்கும் சலுகைகளை சில ஏற்றுமதியாளர்கள் தவறாக பயன்படுத்துவதை தடுப்பதற்காக வரித்துறையால் சரிபார்ப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
30 நிறுவனங்கள் விண்ணப்பம்
கோவை மண்டலத்தில் கடந்த 3 மாதங்களில் 100 ஏற்றுமதி நிறுவனங்கள் விண்ணப்பித்து, ஆவணங்களை சரிபார்ப்புக்கு பிறகு, சரிபார்க்கப்பட வேண்டிய பட்டியலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். தற்போது நடந்த முகாம்களில் 30 ஏற்றுமதி நிறுவனங்கள் விண்ணப்பித்து அவர்களின் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டுள்ளது. ரீபண்ட் தொகையை தவறாக பெற்றிருக்கலாம் என்று வகைப்படுத்தப்பட்ட ஏற்றுமதியாளர்கள் சரிபார்க்கப்பட வேண்டிய பட்டியலில் வைக்கப்படுகிறார்கள். அவர்கள் ரீபண்ட் வழங்குவதும் நிறுத்தி வைக்கப்படும். ஏற்றுமதியாளர்களுடன் வர்த்தகம் செய்த செய்த நிறுவனங்கள் காரணமாகவும் சில ஏற்றுமதி நிறுவனங்கள் இந்த பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் பின்னலாடை சரக்குகள் பல்வேறு இடங்களில் 100 சதவீதம் ஆய்வுக்கு உட்படுத்தப்படும். சரிபார்க்கப்பட வேண்டிய பட்டியலில் உள்ள ஏற்றுமதியாளர்கள் இந்த சிறப்பு முகாம்களில் ஆவணங்களை அளித்து பட்டியலில் இருந்து விடுபட்டு பயன்பெறலாம். ஜி.எஸ்.டி. வரி தொடர்பான பிரச்சினைகளை தீர்வு காண ஏற்றுமதியாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.