கடந்த ஆண்டு கொடிநாள் நிதி ரூ.1¾ கோடி வசூல்-கலெக்டர் கார்மேகம் தகவல்
சேலம் மாவட்டத்தில் கடந்த ஆண்டு கொடிநாள் நிதி ரூ.1¾ கோடி வசூல் செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் கார்மேகம் தெரிவித்தார்.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் கடந்த ஆண்டு கொடிநாள் நிதி ரூ.1¾ கோடி வசூல் செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் கார்மேகம் தெரிவித்தார்.
கொடிநாள் வசூல்
சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கொடி நாளையொட்டி நேற்று கலெக்டர் கார்மேகம் கொடிநாள் உண்டியலில் நிதியளித்து வசூலை தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
முப்படை வீரர்களின் மகத்தான சேவையை நினைவு கூரும் வகையில் முப்படையினர் கொடிநாள் ஆண்டுதோறும் டிசம்பர் 7-ந் தேதி நாடு முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது. சேலம் மாவட்டத்துக்கு கடந்த ஆண்டு கொடிநாள் நிதி வசூல் இலக்காக ரூ.1 கோடியே 57 லட்சத்து 96 ஆயிரம் நிர்ணயிக்கப்பட்டது.
கொரோனா தொற்றின் காரணமாக ஊரடங்கு அமலில் இருந்த நிலையிலும் தீவிர முயற்சியால் இலக்கை விட அதிகமாக 11 சதவீதம் வசூல் செய்யப்பட்டு மொத்தம் ரூ.1 கோடியே 75 லட்சத்து 36 ஆயிரத்து 44 வசூல் செய்யப்பட்டுள்ளது. இதில் மாநகராட்சியிலும் இலக்கை தாண்டி ரூ.11 லட்சத்து 34 ஆயிரம் வசூலிக்கப்பட்டு உள்ளது.
இலக்கு நிர்ணயம்
இந்த ஆண்டு ரூ.1 கோடியே 89 லட்சத்து 55 ஆயிரம் கொடிநாள் நிதி வசூல் செய்திட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கொடிநாள் நிதி வசூல் இலக்கை எய்திட துறை அலுவலர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். கொடிநாள் நிதியில் இருந்து இந்த ஆண்டில் ரூ.97 லட்சத்து 55 ஆயிரத்து 133 மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
முன்னாள் படைவீரர்கள் அனைவரும் குறைதீர்க்கும் முகாம்களில் கலந்துகொண்டு தங்களுடைய குறைகளை தெரிவிக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குனர் மேஜர் தே.பிரபாகர் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.