கொரோனா 3-வது அலையை எதிர்கொள்ள 17 பேர் அடங்கிய மருத்துவ நிபுணர் குழு நியமனம் - கர்நாடக அரசு உத்தரவு

கொரோனா 3-வது அலையை எதிர்கொள்ள கர்நாடக அரசு, 17 பேர் அடங்கிய மருத்துவ நிபுணர் குழுவை நியமனம் செய்து உத்தரவிட்டுள்ளது.

Update: 2021-12-07 22:12 GMT
பெங்களூரு:

கொரோனா 3-வது அலை

2-வது அலையின் தாக்கம் படிப்படியாக குறைந்து வந்தது. இந்த நிலையில் கர்நாடகத்தில் கடந்த நவம்பர் மாதம் இறுதி முதல் மீண்டும் கொரோனா பாதிப்பு வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு கொரோனா வேகமாக பரவி வருகிறது. இதனால் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் கடும் பீதி ஏற்பட்டுள்ளது. அத்துடன் உருமாறிய புதிய வகை ஒமைக்ரான் வைரசும் 2 பேருக்கு கண்டறியப்பட்டுள்ளது. 

இதனால் கர்நாடகத்தில் கொரோனா 3-வது அலை தொடங்கிவிட்டதாக கருதப்படுகிறது. இதனால் கொரோனா பரவலை கட்டுக்குள் வைக்க கர்நாடக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க படுக்கை வசதிகள், தீவிர சிகிச்சை பிரிவு வார்டுகளை சுகாதாரத்துறையினர் தயார்படுத்தி வருகிறார்கள். 

நிபுணர்குழு அமைப்பு

இந்த நிலையில் கர்நாடகத்தில்  கொரோனா 3-வது அலையை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் மாநில அரசின் சுகாதாரத்துறை மருத்துவ நிபுணர் குழு ஒன்றை அமைத்துள்ளது. அந்த குழுவுக்கு தலைவராக பெங்களூரு மருத்துவ கல்லூரி பேராசிரியர் கே.ரவி நியமிக்கப்பட்டுள்ளார். 

அந்த குழுவின் உறுப்பினர்களாக மருத்துவ கல்வி இயக்குனர் கிரிஷ், ஜெயதேவா இதய நோய் ஆஸ்பத்திரி இயக்குனர் மஞ்சுநாத், ராஜீவ்காந்தி நெஞ்சக ஆஸ்பத்திரி டாக்டர் நாகராஜ், போர்டிஸ் மருத்துவமனை மூத்த டாக்டர் ரமேஷ், விக்ரம் மருத்துவமனை நுரையீரல் நிபுணர் சதீஸ், துமகூரு சித்தார்த் மருத்துவ கல்லூரி துணை வேந்தர் பாலகிருஷ்ணஷெட்டி ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

17 பேர் உறுப்பினர்கள்

நிமான்ஸ் மருத்துவமனை மருத்துவ கண்காணிப்பாளர் பத்ரிநாராயண், பெங்களூரு மருத்துவ கல்லூரி பேராசிரியர் சசிபூஷன், கொலம்பியா ஏசியா மருத்துவமனை டாக்டர் பிரதீப் ரங்கப்பா, செயின்ட் ஜான்ஸ் மருத்துவ கல்லூரி பேராசிரியர் சந்திரமவுலி, அப்பல்லோ மருத்துவமனை நுரையீரல் டாக்டர் ரவீந்திர மேதா, மணிப்பால் மருத்துவ பல்கலைக்கழக சி.சி.யு. தலைவர் சுனில் காரந்த், இந்திரா காந்தி அரசு குழந்தைகள் நல ஆஸ்பத்திரி பேராசிரியர் பசவராஜ், பெங்களூரு மருத்துவ கல்லூரி டாக்டர் சவிதா, மணிப்பால் மருத்துவமனை காது-மூக்கு-தொண்டை நிபுணர் சம்பத் ஆகியோர் என மொத்தம் 17 பேர் உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

சிகிச்சை முறைகள்

இந்த குழு, உலக சுகாதார நிறுவனம், மத்திய-மாநில அரசுகள் பிறப்பிக்கும் வழிகாட்டுதலை செயல்படுத்துவது, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் இடையே நல்லுறவை ஏற்படுத்தி ஆலோசனைகளை வழங்குவது, மருத்துவ படுக்கைகளை அதிகப்படுத்த நடவடிக்கை எடுப்பது, மருத்துவ சிகிச்சைக்கு பின்பற்றப்படும் சிகிச்சை முறைகளை செயல்படுத்த நடவடிக்கை எடுப்பது போன்ற பணிகளை மேற்கொள்ளும் என்று கர்நாடக அரசு தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்