மகள் உறவுமுறை கொண்ட மைனர் பெண்ணை கர்ப்பமாக்கிய வாலிபர் - போலீசுக்கு பயந்து தற்கொலை முயற்சி

மைசூரு அருகே மகள் உறவுமுறை கொண்ட மைனர் பெண்ணை வாலிபர் கற்பழித்துள்ளார். அவர், போலீஸ் விசாரணைக்கு பயந்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் நடந்துள்ளது.;

Update: 2021-12-07 21:51 GMT
மைசூரு:

மனைவி பிரசவத்திற்கு சென்றார்

  மைசூரு மாவட்டம் நஞ்சன்கூடு தாலுகா ஹாரேப்புரம் கிராமத்தை சேர்ந்தவர் பிரதீப்(வயது 26). இவருக்கு திருமணம் முடிந்து மனைவி உள்ளார். தற்போது அவரது மனைவி கர்ப்பமாக உள்ளார். இதையடுத்து அவர், மனைவியை பிரசவத்திற்காக தாய் வீட்டிற்கு அனுப்பி வைத்து விட்டார். 

இதற்கிடையே பிரதீப்பின் வீட்டிற்கு மனைவியின் அக்காள் மகளான மைனர் பெண் வந்து சென்றுள்ளார்.

மைனர் பெண் கர்ப்பம்

  அப்போது பிரதீப்புக்கு, மைனர் பெண் மீது மோகம் ஏற்பட்டுள்ளது. இதனால் மைனர் பெண்ணை, பிரதீப் கட்டிபிடித்த நிலையில் செல்போனில் புகைப்படம் எடுத்துள்ளார். இதையடுத்து அந்த புகைப்படத்தை காண்பிடித்து மைனர் பெண்ணை, பிரதீப் மிரட்டி கற்பழித்துள்ளார். இப்படி வீட்டிற்கு வரும்போதெல்லாம் மைனர் பெண்ணை, பிரதீப் தொடர்ந்து கற்பழித்து வந்துள்ளார்.

  இதனால் நாளடைவில் மைனர் பெண் கர்ப்பமாகி உள்ளார். இதையறிந்த பிரதீப், மைனர் பெண்ணின் வயிற்றில் வளரும் கருவை கலைக்க முடிவு செய்தார். அதன்படி நேற்றுமுன்தினம் வீட்டில் யாருக்கும் தெரியாமல் பிரதீப், மைனர் பெண்ணை தனியார் ஆஸ்பத்திரி ஒன்றுக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு பரிசோதனையில் மைனர் பெண் கர்ப்பமாக இருப்பதை அறிந்த டாக்டர்கள், பிளிகெரே போலீசாருக்கு உடனடியாக தகவல் கொடுத்தனர்.

விஷம் குடித்து தற்கொலை முயற்சி

  அந்த தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கொண்டிருந்தனர். இதனால் போலீசாரின் விசாரணைக்கு பயந்த பிரதீப் வீட்டிற்கு வந்து விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதனால் சிறிது நேரத்தில் பிரதீப் மயங்கி விழுந்து உயிருக்கு போராடினார். அவரை, அப்பகுதியினர் உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக மைசூரு கே.ஆர். ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதையறிந்த போலீசார் ஆஸ்பத்திரிக்கு சென்று விசாரணை நடத்தினர்.

  அதில் மைனர் பெண்ணை கற்பழித்து கர்ப்பமாக்கியதில் போலீசாரின் விசாரணைக்கு பயந்து பிரதீப் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது. இதையடுத்து அவர் மீது போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கொண்டனர். மேலும் அவர் குணமடைந்து வந்ததும் கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் இறங்கியுள்ளனர். இதற்கிடையே பாதிக்கப்பட்ட மைனர் பெண்ணை மீட்டு காப்பகத்தில் சேர்த்தனர். இந்த சம்பவம் நஞ்சன்கூடுவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்