விபத்தில் கை, கால் செயல் இழந்த போதும் காந்தியின் கொள்கையை பரப்ப சக்கர நாற்காலியில் பயணத்தை தொடர்ந்த தம்பதி

விபத்தில் கை, கால் செயல் இழந்த போதும் காந்தியின் கொள்கையை பரப்ப ஒரு தம்பதி சக்கர நாற்காலியில் பயணத்தை தொடங்கியுள்ளார்கள்.;

Update: 2021-12-07 21:13 GMT
கடத்தூர், டிச.8-
விபத்தில் கை, கால் செயல் இழந்த போதும் காந்தியின் கொள்கையை பரப்ப ஒரு தம்பதி சக்கர நாற்காலியில் பயணத்தை தொடங்கியுள்ளார்கள். 
காந்திய தம்பதி
மதுரையை சேர்ந்தவர் கருப்பையா (வயது 57). இவருடைய மனைவி சித்ரா (58). காந்திய கொள்கையில் பெரும் ஈடுபாடு கொண்ட இவர்கள் நாடு முழுவதும் பயணம் செய்து காந்தியின் கொள்கைகளை பரப்பி வருகிறார்கள். மேலும் அகில இந்திய காந்திய இயக்கத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர்களாக உள்ளனர்.
குஜராத், பீகார், ஒடிசா, காஷ்மீர், பஞ்சாப், வாகா என நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு நடை பயணமாகவும், சைக்கிளிலும் சென்று கடந்த 31 ஆண்டுகளாக இந்த லட்சிய பயணத்தை தொடர்கிறார்கள்.
நாய்கள் கடித்தன
இந்தநிலையில் கடந்த ஆகஸ்டு மாதம் 15-ந் தேதி சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு சமர்ப்பண யாத்திரை என்ற பெயரில் ஒரு நடை பயணத்தை ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் தொடங்கினார்கள். கடந்த செப்டம்பர் மாதம் 11-ந் தேதி பாரதியார் நினைவு நாள் அன்று புதுச்சேரியில் இந்த பயணம் முடிவதாக இருந்தது.
ஆகஸ்டு 24-ந் தேதி நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டையில் செல்லும் போது சித்ராவை நாய்கள் கடித்துவிட்டன. அப்போது கீழே விழுந்து படுகாயம் அடைந்த சித்ராவுக்கு ஒரு கையும், காலும் செயல் இழந்தன. இதையடுத்து கோபி அருகே உள்ள ஓடத்துறை கிராமத்தில் தன்னுடைய பாட்டியின் வீட்டில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார். 
சக்கர நாற்காலியில்...
விபத்தில் பெரும் சோதனையை சந்தித்தபோதும் மீண்டும் காந்திய கொள்கை பயணத்தை இந்த தம்பதி தொடர முடிவு செய்தார்கள். அதன்படி நேற்று முன்தினம் விழுப்புரம் வரை காரில் கருப்பையாவும், சித்ராவும் சென்றார்கள். பின்னர் அங்கிருந்து புதுச்சேரிக்கு நடைபயணத்தை தொடர்ந்தார்கள். கை, கால் செயல் இழந்த சித்ரா சக்கர நாற்காலியில் அமர்ந்து செல்ல, கருப்பையா உடன் நடந்து சென்றார். அவர்களை  ஓடத்துறை ஊராட்சி தலைவர் பாலமுருகன் பொன்னாடை போர்த்தி வழியனுப்பி வைத்தார். 
பணத்தை நோக்கி பயணப்பட்டு, நின்று மூச்சு விட நேரமில்லாமல் ஓடுபவர்களுக்கு மத்தியில் காந்தியின் கொள்கைகளை சிரமப்பட்டு சுமந்து செல்லும் இந்த தம்பதியை பலரும் பாராட்டி வருகிறார்கள். 

மேலும் செய்திகள்