தி.மு.க. பிரமுகர் கொலையில் துப்பு துலக்க தனிப்படை அமைப்பு
குளச்சல் அருகே தி.மு.க. பிரமுகர் கொலை செய்யப்பட்ட வழக்கில் துப்பு துலக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
குளச்சல்,
குளச்சல் அருகே தி.மு.க. பிரமுகர் கொலை செய்யப்பட்ட வழக்கில் துப்பு துலக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-
தி.மு.க. பிரமுகர் கொலை
குளச்சல் அருகே உள்ள செம்பொன்விளை மின்வாரிய அலுவலகம் பகுதியை சேர்ந்தவர் குமார் சங்கர் (வயது 52), எலக்ட்ரீசியன். இவர் ரீத்தாபுரம் பேரூர் தி.மு.க. கிளை செயலாளராக இருந்து வந்தார். இவருக்கு ரத்னாவதி என்ற மனைவியும், தீபாவதி, சோனியாவதி என்ற 2 மகள்களும் உள்ளனர்.
குமார் சங்கர் நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் குடும்பத்தினருடன் வீட்டில் இருந்தார். அப்போது ஒரு சிறுவன் அடங்கிய கும்பல் வீட்டிற்குள் சென்று குமார் சங்கரை வெளியே அழைத்து சென்றது.
அவர்கள் பேசிக் கொண்டிருந்த போது திடீரென அந்த கும்பல் அரிவாளால் குமார் சங்கரை சரமாரியாக வெட்டியது. இதில் அவர் துடி துடித்து பரிதாபமாக இறந்தார்.
இதை வெகுதூரத்தில் இருந்து பார்த்த மகள் தீபாவதி அதிர்ச்சியில் கூச்சலிட்டார். சத்தம் கேட்டு பொதுமக்கள் திரண்டனர். இதற்கிடையே அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியது.
தனிப்படை அமைப்பு
இதுகுறித்து தகவல் அறிந்த குளச்சல் போலீஸ் துணை சூப்பிரண்டு தங்கராமன், இன்ஸ்பெக்டர் அருள்பிரகாஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பிறகு உடலை கைப்பற்றி ஆசாரிபள்ளம் மருத்துவக் கல்லூரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கும்பல் குறித்தும் கொலைக்கான காரணம் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த கொலையில் துப்பு துலக்க இன்ஸ்பெக்டர் அருள்பிரகாஷ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் கொலை நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதற்கிடையே கொலை நடந்த பின்பு அந்த பகுதியை சேர்ந்த ஒரு வாலிபர் தலைமறைவாகியுள்ளார். அவருக்கும் இந்த கொலைக்கும் தொடர்பு உள்ளதா? என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிரேத பரிசோதனை
இதற்கிடையே கொலை செய்யப்பட்ட குமார் சங்கரின் உடல் நேற்று ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது, குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சுரேஷ்ராஜன் அஞ்சலி செலுத்தினார்.