திருமண நாளில் விபத்தில் பலியான தொழிலாளி
சேத்தூர் அருகே விபத்தில் தொழிலாளி பரிதாபமாக பலியானார்.
தளவாய்புரம்,
சேத்தூர் அருகே உள்ள சுந்தரநாச்சியாபுரம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் இன்னாசி (வயது 42). இவர் வள்ளியூரில் உள்ள தோட்டத்தில் தோட்ட வேலை பார்த்து வந்தார். இவருடைய மனைவி ரத்னா தேவி. இவர்களுக்கு திருமணமாகி 14 ஆண்டுகள் ஆகின்றன. இந்த நிலையில் நேற்று முன்தினம் திருமண நாள் என்பதால் விடுமுறை எடுத்து இன்னாசி தனது சொந்த ஊருக்கு வந்திருந்தார். இரவு தனது இருசக்கர வாகனத்தில் தனது நண்பரான மரிய ஜோசப் ரத்தினம் என்பவருடன் சேத்தூரில் ஏ.டி.எம்.மில் பணம் எடுத்து விட்டு ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது கரையடி பிள்ளையார்கோவில் அருகே முன்னால் சென்ற ஆட்டோ திடீரென பிரேக் போட்டதால் இவரது இருசக்கர வாகனம் ஆட்டோ மீது மோதியது. இதில் இருசக்கர வாகனத்தில் இருந்து இருவரும் கீழே விழுந்தனர். அப்போது ராஜபாளையத்திலிருந்து தென்காசி நோக்கி சென்ற கார் ஒன்று இன்னாசி மீது ஏறியது. இதில் இன்னாசி தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மரிய ஜோசப் ரத்தினம் படுகாயமடைந்தார். இதுபற்றி சேத்தூர் புறநகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு படுகாயமடைந்த மரிய ஜோசப் ரத்தினத்திற்கு ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பலியான இன்னாசி உடல் ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது. இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து கார் டிரைவர் ராஜபாளையம் பகுதியை சேர்ந்த சரவணன் என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.