நிதி நிறுவனத்தில் ரூ.1¼ கோடி மோசடி; மேலாளர்-மனைவி கைது

சுரண்டை அருகே நிதி நிறுவனத்தில் ரூ.1¼ கோடி மோசடி நடந்தது தொடர்பாக அதன் மேலாளர், அவருடைய மனைவி கைது செய்யப்பட்டனர்.;

Update: 2021-12-07 19:56 GMT
சுரண்டை:
சுரண்டை அருகே, நிதி நிறுவனத்தில் ரூ.1¼ கோடி மோசடி நடந்தது தொடர்பாக அதன் மேலாளர், அவருடைய மனைவி கைது செய்யப்பட்டனர்.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

நிதி நிறுவனம்

தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே சேர்ந்தமரத்தில் தனியார் நிதி நிறுவனம் உள்ளது. தங்க நகைகளுக்கு இங்கு கடன் வழங்கப்பட்டு வந்தது. இங்கு பாவூர்சத்திரம் அருகே திருமலாபுரம் கிராமத்தை சேர்ந்த ராமசாமி மகன் மாரி கணேசன் (வயது 42) என்பவர் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி மாரிச்செல்வி (38) அதே நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார்.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு அடகு வைக்க வந்த வாடிக்கையாளர்களின் நகைகளை அவர்கள் சென்றபின் வேறு பெயரில் கூடுதல் தொகைக்கு அடகு வைத்ததாக மாரி கணேசன் மீது குற்றச்சாட்டு எழுந்தது.

மோசடி

இதையடுத்து நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் இருந்து வந்து கணக்குகளை தணிக்கை செய்தனர். இதில் மாரி கணேசன் நகைகளை வேறு பெயருக்கு மாற்றி வைத்ததன் மூலம் மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

தங்க நகைகள் இருப்பு சரிபார்க்கப்பட்டபோது சுமார் 1 கிலோ 350 கிராம் நகைகள் காணாமல் போயிருந்தது தெரியவந்தது. நகைகள் மற்றும் மோசடி செய்த பணம் என மொத்த முறைகேடு ரூ.1 கோடியே 30 லட்சம் என தெரியவந்தது.

கைது

இதையடுத்து நிதி நிறுவனத்தின் மண்டல மேலாளர் ஸ்ரீராஜூ அளித்த புகாரின் பேரில் சேர்ந்தமரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், மாரி கணேசன், அவரது மனைவி மாரிச்செல்வி மற்றும் ஊழியர்கள் சாம்பவர் வடகரை முருகன், தன்னூத்து சங்கர், சேர்ந்தமரம் அரவிந்தசாமி, சாம்பவர்வடகரை ஜெயராம், ஆண்டிநாடானூர் பசுபதி ஆகிய 7 பேர் கூட்டுச்சதி செய்து மோசடி செய்தது தெரியவந்தது. 

இதைத்தொடர்ந்து மாரி கணேசன், அவரது மனைவி மாரிச்செல்வி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மேலும் 5 பேரை சேர்ந்தமரம் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்