ஆலயத்தில் நகை திருடிய வாலிபர் கைது
களியக்காவிளையில் கிறிஸ்தவ ஆலயத்தில் 7 பவுன் நகை திருடிய வாலிபர் கண்காணிப்பு கேமரா பதிவு மூலம் சிக்கினார். அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
களியக்காவிளை,
களியக்காவிளையில் கிறிஸ்தவ ஆலயத்தில் 7 பவுன் நகை திருடிய வாலிபர் கண்காணிப்பு கேமரா பதிவு மூலம் சிக்கினார். அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஆலயத்தில் திருட்டு
களியக்காவிளை பஸ் நிலையம் அருகில் புனித அந்தோணியார் ஆலயம் உள்ளது. இங்குள்ள மாதா சிலைகளின் கண்ணாடியை உடைத்து 7 பவுன் தங்க நகையை மர்ம நபர் திருடி சென்றார். இந்த சம்பவம் கடந்த அக்டோபர் மாதம் நடந்தது.
இதுபற்றி ஆலய நிர்வாகம் சார்பில் களியக்காவிளை போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் இந்த திருட்டில் துப்பு துலக்க தனிப்படை அமைக்கப்பட்டது. அந்த தனிப்படை போலீசார் ஆலயத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்த்தனர். அதில் வாலிபரின் உருவம் பதிவாகி இருந்தது. அதை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள்.
வாலிபர் கைது
மேலும் அந்த படம் பத்திரிகைகளில் வெளியிடப்பட்டது. அதை பார்த்தவர்கள் தனிப்படை போலீசாருக்கு தகவல் ெ்தரிவித்தனர். அதன் அடிப்படையில் ஆலயத்தில் திருடிய வாலிபரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர் கூடங்குளம் கூத்தங்குழியை சேர்ந்த டேனியல் (வயது 22) என்பதும், அவர் நகை திருடியதையும் ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.
அதைத்தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.