லாரிகளில் சரக்குகளை ஏற்ற, இறக்க நேர கட்டுப்பாடு

விருதுநகர் பகுதியில் லாரிகளில் சரக்குகளை ஏற்ற, இறக்க நேர கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

Update: 2021-12-07 19:52 GMT
விருதுநகர், 
விருதுநகர் பகுதியில் லாரிகளில் சரக்குகளை ஏற்ற, இறக்க நேர கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. 
ஆலோசனை கூட்டம் 
விருதுநகர் தனியார் திருமண அரங்கில் துணை போலீஸ் சூப்பிரண்டு அர்ச்சனா தலைமையில் லாரி உரிமையாளர் சங்கம் மற்றும் லோடுமேன் சங்கத்துடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
 இக்கூட்டத்தில் போக்குவரத்து போலீசார் மற்றும் போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில்  கீழ்க்கண்டவாறு முடிவு செய்யப்பட்டது. விருதுநகரில் காலை 8 மணி முதல் மதியம் 1 மணிவரை சரக்கு லாரிகள் சரக்குகளை ஏற்றவோ, இறக்கவோ அனுமதி இல்லை. அதே போன்று லோடு மேன்கள் காலை 8 மணி முதல் மதியம் 1 மணிவரை வெளியூர் மற்றும் உள்ளூர் லாரிகளை சரக்குகளை ஏற்றவோ இறக்கவோ நகருக்குள் அழைத்து வரக்கூடாது. மதியம் 1 மணி முதல் மாலை 4 மணிவரை நகர்ப்பகுதியில் சரக்குகளை ஏற்றவும், இறக்கவும் அனுமதிக்கப்படும்.
போக்குவரத்து விதி 
 அதேபோன்று லோடு மேன்கள் சரக்குகளை ஏற்றவும், இறக்கவும் லாரிகளை நகருக்குள் அழைத்து வரலாம். இரவு 9 மணி முதல் காலை 8 மணி வரை லாரிகள் நகர் பகுதியில் சரக்குகளை இறக்கவும், ஏற்றவும் செய்யலாம். அதேபோல லோடு மேன்கள் சரக்குகளை ஏற்றவோ, இறக்கவோ லாரிகளை அழைத்து வரலாம்.
 காரியாபட்டி, மல்லாங்கிணறு பகுதியிலிருந்து வரும் கனரக மற்றும் இலகுரக சரக்கு வாகனங்கள் அரசு மருத்துவமனை சந்திப்பு, அல்லம்பட்டி சந்திப்பு வழியாக தடைசெய்யப்பட்ட நேரத்தில் செல்ல வேண்டும். அதே போன்று மதுரையில் இருந்து வரும் கனரக மற்றும் இலகுரக வாகனங்கள் புறவழிச்சாலை சிவகாசி பைபாஸ் ரோடு சந்திப்பு எம்.ஜி.ஆர். சிலை வழியாக தடை செய்யப்பட்ட நேரத்தில் செல்ல வேண்டும். பள்ளி செல்லும் குழந்தைகளும், பொதுமக்களும் போக்குவரத்து விதிகளை பின்பற்றி நடந்து கொள்ளவேண்டும்.
 விருதுநகர் பகுதிக்குள் உள்ள வாகனங்கள் மதியம் 1 மணி முதல் மணி மாலை 4 மணி வரை நகர சாலைகளில் செல்லலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்