கால்வாயில் மீண்டும் உடைப்பு; நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதம்

செங்கோட்டை அருகே புளியரை தட்சணாமூர்த்தி கோவில் அருகில் இருக்கும் சாஸ்தாபத்து குளத்தின் கால்வாயில் மீண்டும் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதம் அடைந்தன.

Update: 2021-12-07 19:29 GMT
செங்கோட்டை:
செங்கோட்டை அருகே புளியரை தட்சணாமூர்த்தி கோவில் அருகில் இருக்கும் சாஸ்தாபத்து குளத்தின் கால்வாயில் மீண்டும் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதம் அடைந்தன.

கால்வாயில் உடைப்பு

தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே புளியரை சாஸ்தாபத்து குளம் உள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு தொடர் மழையால் தண்ணீர் அதிகம் வந்ததால் குளத்தின் கால்வாயில் உடைப்பு ஏற்பட்டு வயல்களில் தண்ணீர் புகுந்து நெல் பயிர்கள் அனைத்தும் நாசமாகின. இதுகுறித்து தகவல் கிடைத்ததும் தென்காசி மாவட்ட கலெக்டர் கோபால சுந்தரராஜ் பாதிக்கப்பட்ட இடங்களை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

பின்னர் அவருடைய உத்தரவின் பேரில் அதிகாரிகள் குளத்தின் கால்வாயில் உடைப்பு ஏற்பட்ட இடத்தில் மணல் மூட்டைகளை அடுக்கி வைத்து சரி செய்தனர்.

பயிர்கள் நாசம்

இந்த நிலையில் நேற்று முன்தினம் பெய்த தொடர் மழையால் சாஸ்தாபத்து குளத்து கால்வாயில் 3-வது முறையாக மீண்டும் உடைப்பு ஏற்பட்டது. இதனால் தண்ணீர் வெளியாகி அருகில் உள்ள வயல்களில் புகுந்தது. அந்த வயல்களில் பயிரிடப்பட்டு உள்ள நெல் பயிர்கள் நீரில் மூழ்கி நாசமாகின. எனவே, இதை சீரமைத்து நிரந்தர தீர்வு காண வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, ‘கடந்த முறை குளத்து கால்வாயில் மணல் மூட்டைகள் அடுக்கி சரி செய்தனர். அதே அதிகாரிகள் தான் இப்போதும் இருக்கிறார்கள். தொடர்மழையால் இதுபோன்ற அவலநிலை சுமார் 10 ஆண்டு காலமாக தொடர்ந்து வருகிறது. இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு நஷ்டம் அடைந்து வருகின்றனர். எனவே, அதிகாரிகள், உடைந்த கால்வாயை பார்வையிட்டு சீரமைத்து நிரந்தர தீர்வு காண்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

மேலும் செய்திகள்