மேல்ஆலத்தூர் ரெயில்வே சுரங்கப்பாதையில் குளம்போல் தேங்கிய தண்ணீர்
மேல்ஆலத்தூர் ரெயில்வே சுரங்கப்பாதையில் குளம்போல் தண்ணீர் தேங்கி உள்ளதால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
குடியாத்தம்
மேல்ஆலத்தூர் ரெயில்வே சுரங்கப்பாதையில் குளம்போல் தண்ணீர் தேங்கி உள்ளதால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
குளம்போல் தண்ணீர்
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த மேல் ஆலத்தூர் பகுதியில் சுமார் 6 ஆண்டுகளுக்கு முன்பு ெரயில்வே சுரங்கப்பாதை கட்டப்பட்டது. இதன் வழியாக குடியாத்தம் நகருக்கு இப்பகுதியில் உள்ள மேல் ஆலத்தூர், கூடநகரம், அணங்காநல்லூர், பட்டு, கொதகுப்பம் உள்பட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் சென்று வந்தனர்.
மழைக்காலங்களில் இந்த சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்குகிறது. இந்த தண்ணீரை வெளியேற்ற பொதுப்பணித்துறை சார்பில் ஊழியர்கள் நியமிக்கப்பட்டு இரண்டு மோட்டார்கள் மூலம் பம்ப் செய்யப்பட்டு அந்த தண்ணீர் வெளியேற்றி அருகில் உள்ள கிணற்றில் விடப்பட்டு வந்தது. தற்போது அந்த கிணறும் நிரம்பிவிட்டது.
நிரந்தர தீர்வுகாண வேண்டும்
மழை இல்லாவிட்டாலும் சுரங்கப்பாதையின் இரு பக்கத்திலும் உள்ள சுவர்களில் இருந்து ஊற்று போன்று தண்ணீர் வந்து கொண்டே இருக்கிறது. இதனால் தினமும் சில அடி உயரத்திற்கு தண்ணீர் தேங்குவதால் அந்த வழியாக செல்லும் மாணவர்கள், பொதுமக்கள், தொழிலாளர்கள் அவதிக்கு உள்ளாகிறார்கள். நேற்று காலையில் சுமார் 3 அடி அளவிற்கு தண்ணீர் தேங்கியிருந்தது.
அதனால் இந்த வழியாக செல்லும் மாணவர்கள், பொதுமக்கள் சிரமப்பட்டனர். தண்ணீரை வெளியேற்றி பம்ப் செய்யப்படும் மோட்டார்களில் ஒன்று பழுதாகி விட்டதால் தண்ணீரை வெளியேற்ற முடியவில்லை. தண்ணீரை வெளியேற்ற வெளியேற்ற மீண்டும் தண்ணீர் வந்து கொண்டே இருக்கிறது. இதற்கு நிரந்தரமான தீர்வு காண வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.