ரூ.48 கோடியில் புதுப்பிக்கப்பட்ட நெல்லை புதிய பஸ்நிலையம் இன்று திறப்பு

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரூ.48 கோடியில் புதுப்பிக்கப்பட்ட நெல்லை புதிய பஸ் நிலையத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் இன்று (புதன்கிழமை) திறந்து வைக்கிறார்.

Update: 2021-12-07 18:44 GMT
நெல்லை:
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரூ.48 கோடியில் புதுப்பிக்கப்பட்ட நெல்லை புதிய பஸ் நிலையத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் இன்று (புதன்கிழமை) திறந்து வைக்கிறார்.

புதிய பஸ்நிலையம்

நெல்லை மாநகராட்சி பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த திட்டத்தின் மூலம் நெல்லை சந்திப்பு பஸ்நிலையம், வேய்ந்தான்குளம் புதிய பஸ்நிலையம் (பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர். பஸ்நிலையம்), பாளையங்கோட்டை பஸ்நிலையம், வர்த்தக மையம், நெல்லை டவுன் மார்க்கெட், பாளையங்கோட்டை மார்க்கெட், நேதாஜி கலையரங்கம், வ.உ.சி. மைதானம், தச்சநல்லூர் மண்டல அலுவலகம், வாகன காப்பகம், பூங்காக்கள் உள்ளிட்டவை புதுப்பிக்கும் பணி கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வருகிறது.

நெல்லை புதிய பஸ்நிலையம் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் புதுப்பிக்கும் பணி தொடங்கியது. அக்டோபர் மாதம் முதல் பஸ் நிலையத்தை மூடி பணியை விரைவுபடுத்தினார்கள். ரூ.48 கோடியில் நடைபெற்ற இந்த பணியில் ஏற்கனவே இருந்த 4 நடைமேடைகளுடன் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க கூடுதலாக 2 நடைமேடைகளும் கட்டப்பட்டுள்ளது.
மேலும் தரை தளம், முதல் தளம் என கடைகளும் கட்டப்பட்டுள்ளன. 6-வது நடைமேடை அருகே நவீன முறையில் கூடுதல் வசதியுடன் வாகன நிறுத்துமிடம் கட்டப்பட்டுள்ளது. மேலும் புதிய பஸ்நிலையத்தில் நவீன வசதியுடன் அறிவியல் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.

மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்

இந்த புதிய பஸ் நிலையத்தின் திறப்பு விழா இன்று (புதன்கிழமை) நடக்கிறது. சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், காணொலி காட்சி மூலம் பஸ் நிலையத்தை திறந்து வைக்கிறார்.
இதனுடன் ரூ.14 கோடியே 50 லட்சத்தில் புதுப்பிக்கப்பட்ட பாளையங்கோட்டை பஸ்நிலையம் மற்றும் ரூ.6¾ கோடியில் நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் அருகே உள்ள த.மு. ரோட்டில் 3 அடுக்கில் கட்டப்பட்ட இருசக்கர வாகன நிறுத்தம், பாளையங்கோட்டை என்.ஜி.ஓ. காலனியில் சைக்கிளுக்காக அமைக்கப்பட்டுள்ள தனி சாலை உள்பட ரூ.110 கோடி மதிப்பிலான திட்டங்களை மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.

தொடர்ந்து நெல்லை புதிய பஸ்நிலையத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலெக்டர், மாநகராட்சி ஆணையாளர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்கிறார்கள்.
திறப்பு விழாவை முன்னிட்டு நெல்லை புதிய பஸ் நிலையத்தை சுத்தப்படுத்தும் பணி நேற்று நடந்தது. மேலும் வாழை மரம் மற்றும் அலங்கார தோரணங்கள் கட்டப்பட்டு கோலாகலமாக காட்சியளிக்கிறது. மின்விளக்குகள் ஜொலிக்கின்றன. புதிய பஸ் நிலையத்தில் மின் இணைப்பு வழங்கும் பணி மற்றும் சுகாதாரப்பணிகள், கிருமி நாசினி தெளிக்கும் பணி, தூய்மைப்பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

கலெக்டர் விஷ்ணு ஆய்வு

இந்த நிலையில் புதிய பஸ்நிலையத்தில் கலெக்டர் விஷ்ணு, மாநகராட்சி ஆணையாளர் விஷ்ணு சந்திரன் ஆகியோர் நேற்று பார்வையிட்டு ஆய்வு நடத்தினார்கள். இதில் மேலப்பாளையம் மண்டல உதவி ஆணையாளர் லெனின், சுகாதார அலுவலர் சாகுல் ஹமீது மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்