ரூ.30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வட்டார வளர்ச்சி அலுவலர் கைது
சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூரில் ரூ.30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வட்டார வளர்ச்சி அலுவலர் கைது செய்யப்பட்டார்.;
எஸ்.புதூர்
சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூரில் ரூ.30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வட்டார வளர்ச்சி அலுவலர் கைது செய்யப்பட்டார்.
பள்ளி சுற்றுச்சுவர் கட்ட ஒப்பந்தம்
சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் அருகே உள்ள படமிஞ்சி கிராமத்தைச் சேர்ந்தவர் வெள்ளைச்சாமி. அரசு ஒப்பந்ததாரர். இவர் எஸ்.புதூரில் கட்டுமான பணிகள் மேற்கொண்டு வந்தார்.
இந்தநிலையில் எஸ்.புதூர், உலகம்பட்டி உள்ளிட்ட ஊர்களில் உள்ள பள்ளிகளுக்கு சுற்றுச்சுவர் கட்ட ரூ.1 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த பணிகளை செய்ய ஒப்பந்தகாரர் வெள்ளைச்சாமியை அனுமதிக்க எஸ்.புதூர் வட்டார வளர்ச்சி அலுவலர்(கிராம ஊராட்சி) நிர்மல்குமார், ரூ.30 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது.
கைது
லஞ்சம் கொடுக்க விரும்பாத வெள்ளைச்சாமி, இதுகுறித்து சிவகங்கை லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார், ரசாயனம் தடவிய பண நோட்டுகளை கொடுத்து நிர்மல்குமாரிடம் வழங்குமாறு கூறினர். அதன்படி வெள்ளைச்சாமி, வட்டார வளர்ச்சி அலுவலர் நிர்மல்குமாரிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வைத்து பணத்தை கொடுத்தார்.
அப்போது அங்கு மறைந்து நின்றிருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணை சூப்பிரண்டு மணிமன்னன், போலீஸ் இன்ஸ்பெக்டர் குமாரவேல், சப்-இன்ஸ்பெக்டர் ராஜாமுகமது மற்றும் போலீசார் நிர்மல்குமாரை அதிரடியாக கைது செய்தனர். இது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.