பள்ளிபாளையத்தில் பயங்கரம்: கல்லால் தாக்கி விசைத்தறி தொழிலாளி கொலை-என்ஜினீயர் கைது
பள்ளிபாளையத்தில் கல்லால் தாக்கி விசைத்தறி தொழிலாளி கொலை செய்யப்பட்டார். அவரை கொலை செய்த என்ஜினீயரை போலீசார் கைது செய்தனர்.
பள்ளிபாளையம்:
விசைத்தறி தொழிலாளி
நாமக்கல் மாவட்டம் ஆவாரங்காடு பகுதியை சேர்ந்தவர் வேலப்பன் (வயது 78). விசைத்தறி தொழிலாளி. இவருடைய மனைவி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். மேலும் இவருடைய 3 மகள்களுக்கும் திருமணமாகிவிட்டதால், வேலப்பன் ஆவாரங்காடு பகுதியில் தனியாக வசித்து வந்தார்.
நேற்று காலை வேலப்பன் அங்குள்ள எம்.ஜி.ஆர். சிலை அருகே உள்ள கடைக்கு டீ குடிக்க சென்றார். அங்கு டீ குடித்து விட்டு வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அவருக்கு எதிரே வாலிபர் ஒருவர் நடந்து வந்தார்.
கல்லால் தாக்கி கொலை
அந்த வாலிபர் திடீரென கீழே கிடந்த கல்லை எடுத்து வேலப்பனை சரமாரியாக தாக்கினார். இதில் அவரின் முகம், நெஞ்சு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு, ரத்தம் கொட்டியது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அதே பகுதியை சேர்ந்த பழனிசாமி (68) என்பவர் வாலிபரை தடுக்க முயன்றார்.
ஆனால் ஆக்ரோஷத்தில் இருந்த அந்த வாலிபர் பழனிசாமியையும் தாக்கினார். இதில் அவரும் படுகாயம் அடைந்தார். பின்னர் வாலிபர் அங்கிருந்து தப்பி சென்று விட்டார். இந்த பயங்கர சம்பவத்தை பார்த்த பொதுமக்கள் இதுகுறித்து பள்ளிபாளையம் போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.
மேலும் வேலப்பன், பழனிசாமியை மீட்டு சிகிச்சைக்காக பள்ளிபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து 2 பேரும் மேல்சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி வேலப்பன் பரிதாபமாக இறந்தார். பழனிசாமிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
வாலிபர் பிடிபட்டார்
இதுபற்றி தகவல் அறிந்ததும் நாமக்கல் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு செல்லபாண்டியன், பள்ளிபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரகுமார் ஆகியோர் சம்பவம் நடந்த பகுதியை நேரில் பார்வையிட்டனர். பின்னர் அவர்கள் அக்கம்பக்கத்தினரிடம் வாலிபர் குறித்து தீவிரமாக விசாரித்தனர்.
இதனிடையே வேலப்பனை கொலை செய்து விட்டு தப்பி ஓடிய வாலிபர் போலீசில் பிடிபட்டார். அவரை போலீசார் கைது செய்து விசாரித்தனர். விசாரணையில் கொலை செய்த வாலிபர் திருச்செங்கோடு கவுண்டம்பாளையத்தை சேர்ந்த கோகுல் நந்தா (23) என்பது தெரியவந்தது.
மனநலம் பாதிக்கப்பட்டவர்
என்ஜினீயரான கோகுல் நந்தாவுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு மனநலம் பாதிக்கப்பட்டது. இதற்காக அவர் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று அதிகாலை ஈரோடு கருங்கல்பாளையத்தில் இருந்து அவர் பள்ளிபாளையம் பகுதிக்கு நடந்து வந்ததும், அப்போது எதிரே வந்த வேலப்பனை தாக்கி கொலை செய்ததும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது. தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பள்ளிபாளையத்தில் விசைத்தறி தொழிலாளி கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.