நாமக்கல் அரசு பள்ளி ஆசிரியர் போக்சோவில் கைது: முதன்மை கல்வி அலுவலகத்தை ஆசிரியர்கள் முற்றுகை

நாமக்கல் அரசு பெண்கள் பள்ளி ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டதை கண்டித்தும், பணி பாதுகாப்பு வழங்க கோரியும் முதன்மை கல்வி அலுவலகத்தை, 500-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2021-12-07 18:34 GMT
நாமக்கல்:
ஆசிரியர்கள் முற்றுகை
நாமக்கல் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் மதிவாணன், 10-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பெறப்பட்ட புகாரின் பேரில், போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் நேற்று நாமக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அவர்கள் முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரியிடம் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
பொய்யான குற்றச்சாட்டு
நாமக்கல் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக பணியாற்றும் மதிவாணன் மீது, போக்சோ சட்டத்தின் கீழ் பொய்யான குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டு உள்ளார். இது தொடர்பாக நேற்று முன்தினம் மாலை முதல் இரவு 9 மணி வரை பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் இந்த குற்றச்சாட்டு முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. இந்த குற்றச்சாட்டை திரும்ப பெறவேண்டும் என உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலை நீடித்தால், பள்ளியில் கற்றல், கற்பித்தல் பணிகளில் தொய்வான சூழ்நிலை ஏற்படும். ஆண் ஆசிரியர்களுக்கு பள்ளியில் பாதுகாப்பற்ற சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. இதுபோன்ற நிலை அனைத்து ஆசிரியர்களுக்கும் ஏற்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.
இதுபோன்ற புகார்கள் கூறப்பட்டால் பள்ளிக் கல்வித்துறை, காவல்துறை மற்றும் வருவாய் துறையில் உள்ள உயர் அலுவலர்களை கொண்டு ஒரு குழு அமைத்து அக்குழு குற்றச்சாட்டு குறித்து விசாரணை செய்து அளிக்கும் அறிக்கையின் அடிப்படையிலேயே நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
பணி பாதுகாப்பு கிடைக்கும்
அப்போதுதான் பொய்யான குற்றச்சாட்டில் இருந்து ஆசிரியர்கள் விடுபட முடியும். குற்றச்சாட்டுகள் கூறப்பட்டவுடன் எந்த விசாரணையும் இன்றி நேரடியாக கைது என்பது ஆசிரியர்கள் மற்றும் அவர் தம் குடும்பத்தினருக்கு மிகுந்த மனஉளைச்சலை உண்டாக்குகிறது.
அதனால் பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள் மீது புகார்கள் கூறப்பட்டால் 3 பேர் கொண்ட குழுவை அமைத்து கிடைக்கப்பெறும் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொண்டால் மட்டுமே உரிய பணி பாதுகாப்பு கிடைக்கும்.
இவ்வாறு அதில் கூறி இருந்தனர்.

மேலும் செய்திகள்