தாய், மகளை கொன்று நகை கொள்ளை
விழுப்புரம் அருகே தாய், மகளை அடித்துக் கொலை செய்து நகை கொள்ளையடித்த மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
கண்டமங்கலம்,
விழுப்புரம் அருகே கண்டமங்கலம் அடுத்த கலித்திரம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் தட்சணாமூர்த்தி. இவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவருடைய மனைவி சரோஜா (வயது80). இவர்களது மகள் பூங்காவனம் (60).
கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் அம்மணங்குப்பத்தில் பூங்காவனம் திருமணம் செய்து கொடுக்கப்பட்டார். இவரது கணவர் தங்கவேலு பிரிந்து சென்று விட்ட நிலையில் மகள் வள்ளியுடன் (29) பூங்காவனம் தனது தாய் வீட்டுக்கு வந்து விட்டார்.
அங்கு இருவரும் கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வந்தனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு வள்ளி தனது உறவினர் வீட்டுக்கு சென்று விட்டார். இதனால் சரோஜாவும், பூங்காவனமும் நேற்று முன்தினம் இரவு சாப்பிட்டு விட்டு தூங்கச் சென்றனர்.
கொலை- கொள்ளை
நேற்று காலை நீண்ட நேரமாகியும் இவர்கள் வெளியே வராததால் அக்கம்பக்கத்தினர் சந்தேகமடைந்து உள்ளே சென்று பார்த்த போது தாய், மகள் ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்தனர். இதைப்பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த அவர்கள் இதுகுறித்து போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் கண்டமங்கலம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்த்த போது சரோஜா, பூங்காவனம் ஆகிய இருவரும் நள்ளிரவில் கட்டையால் அடித்துக் கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது. அவர்களது உடல்களை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தொடர்ந்து விசாரித்தனர். இதில் அவர்கள் அணிந்து இருந்த ஒரு பவுன் தங்கச்சங்கிலி, அரை பவுன் கம்மல் ஆகிய நகைகளை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்துக் கொண்டு தப்பியது தெரியவந்தது.
கேமரா ஆய்வு
மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதாவும் அங்கு வந்து சம்பவ இடத்தை பார்வையிட்டார். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. போலீஸ் மோப்ப நாய் ராக்கி மோப்பம் பிடித்தபடி சுமார் 1 கி.மீ. தூரம் ஓடி செல்லிப்பட்டு பெட்ரோல் பங்க் வரை சென்றது. ஆனால் யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. துணை போலீஸ் சூப்பிரண்டு பார்த்திபன் தலைமையில் தனிப்படை போலீஸ் அமைத்து தாய், மகளை கொன்ற மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகிறார்கள். கொலை நடந்த பகுதியில் வைக்கப்பட்டு இருந்த கேமராக்களில் மர்ம ஆசாமிகளின் நடமாட்டம் பதிவாகி உள்ளதா? என்பது குறித்தும் போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.
மேலும் 6 தனிப்படைகள் அமைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
இதனிடையே தாய், மகள் இரட்டைக் கொலை தொடர்பாக தனிப்படை போலீசார் நேற்று இரவு சந்தேகத்தின்பேரில் ஒருவரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தனிமையில் வசித்து வந்த தாய், மகள் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.