ஆவுடையார்கோவில், மணமேல்குடியில் பயிர் காப்பீடு இழப்பீடு வழங்கக்கோரி விவசாயிகள் சாலை மறியல் 120 பேர் கைது
ஆவுடையார்கோவில், மணமேல்குடியில் பயிர் காப்பீடு இழப்பீடு வழங்கக்கோரி சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகள் 120 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஆவுடையார்கோவில்:
பயிர் காப்பீடு
2020-21-ம் ஆண்டிற்கு பயிர் காப்பீடு செய்துள்ள எழுநூற்றி மங்களம், வீரமங்களம், கிடங்கிவயல், சிறு மருதூர், பொன்பேத்தி வட்டங்களை சேர்ந்த சுமார் 40-க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு இழப்பீட்டு தொகை கிடைக்க வில்லை என்று போராட்டம் அறிவித்திருந்தனர்.
அவர்களிடம் ஆவுடையார்கோவில் தாசில்தார் வெள்ளை ச்சாமி, வேளாண்மைத்துறை உதவி இயக்குனர் வனஜா தேவி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். சென்னையில் உள்ள அக்ரி இன்சூரன்ஸ் கம்பெனியில் இருந்து அதிகாரிகள் வருகிறார்கள். அவர்களிடம் பேசிக்கொள்ளலாம் என்று கூறியதை தொடர்ந்து விவசாயிகள் கலைந்து சென்றனர்.
பேச்சுவார்த்தை
இதையடுத்து கடந்த மாதம் 29-ந்தேதி சென்னையில் இருந்து அக்ரி இன்சூரன்ஸ் கம்பெனியில் இருந்து வந்த அதிகாரிகள் வேளாண்மைத்துறை அலுவலகத்தில் வைத்து விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பல்வேறு காரணத்தை கூறி இனி மேற்படி வட்டங்களுக்கு பயிர்காப்பீடு இழப்பீடு வழங்க முடியாது என்று கூறினர். உங்கள் கம்பெனியிலிருந்து இழப்பீடு வழங்கவில்லை என்றால் 7-ந்தேதி சாலைமறியலில் ஈடுபடுவதாக கூறிவிட்டு விவசாயிகள் கலைந்து சென்றனர்.
சாலை மறியல்
அதன்படி நேற்று ஆவுடையார்கோவில் தாசில்தார் அலுவலகம் முன் ஆவுடையார்கோவில்-அறந்தாங்கி சாலையில் விவசாயிகள் மறியலில் ஈடுபட்டனர். மறியலில் சிறுமருதூர் நரேந்திர ஜோதி, கருப்பூர் செந்தில்குமரன், எழுநூற்றி மங்களம் மாரிமுத்து, குளத்துக் குடியிருப்பு சுப்பிரமணியன், ஆவுடையார்கோவில் கலந்தர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் முருகேஷ், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் கணேசன் மற்றும் ஏராளமான விவசாயிகள் இழப்பீடு வழங்கக்கோரி கோஷம் எழுப்பினர். இதையடுத்து ஆவுடையார்கோவில் போலீசார் 70 பேரை கைது செய்து ஒரு தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்துள்ளனர்.
மணமேல்குடி
மணமேல்குடி அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களுக்கு சென்ற ஆண்டிற்கான பயிர்காப்பீடு இழப்பீடு தொகை வழங்கவில்லை என கூறி மணமேல்குடி கிழக்கு கடற்கரை சாலையில் விவசாயிகள் மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு வந்த மணமேல்குடி போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது விவசாயிகள் பயிர்காப்பீடு தொகை உடனே வழங்கவேண்டும் என கோஷங்கள் எழுப்பினார்கள். பின்னர் போலீசார் விவசாயிகள் 50-க்கும் மேற்பட்டோரை கைது செய்து தனியார் திருமணமண்டபத்தில் தங்க வைத்தனர்.