8 மாவட்டங்களில் 27-ந் தேதி உண்ணாவிரதம்
விசைப்படகுகளில் இருந்து தடை செய்யப்பட்ட அதிவேக என்ஜின்களை அகற்றாவிட்டால் 8 மாவட்டங்களில் வருகிற 27-ந்தேதி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவது என நாகை, மயிலாடுதுறை, காரைக்கால் மாவட்ட மீனவர் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
வெளிப்பாளையம்:
விசைப்படகுகளில் இருந்து தடை செய்யப்பட்ட அதிவேக என்ஜின்களை அகற்றாவிட்டால் 8 மாவட்டங்களில் வருகிற 27-ந்தேதி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவது என நாகை, மயிலாடுதுறை, காரைக்கால் மாவட்ட மீனவர் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஆலோசனை கூட்டம்
நாகை அக்கரைப்பேட்டை மீன்பிடி துறைமுகத்தில் நாகை, மயிலாடுதுறை, காரைக்கால் மாவட்ட மீனவ கிராம பஞ்சாயத்தாரின் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. நாகை, மயிலாடுதுறை, காரைக்கால் மாவட்டங்களில் அரசு அறிவுறுத்தலின் பேரில், விசைப்படகுகளில் இருந்து அரசால் தடை செய்யப்பட்ட அதிவேக என்ஜின்கள் அகற்றப்பட்டு விட்டது.
ஆனால் அரசால் தடை செய்யப்பட்ட அதிவேக என்ஜின்களை பயன்படுத்தி தொழில் செய்து வரும் மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த ஒரு சில மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்களை கண்டிப்பது, மேற்கண்ட கிராமங்களில் உள்ள விசைப்படகுகளில் இருந்து அதிவேக என்ஜின்களை வருகிற 24-ந் தேதிக்குள்(வெள்ளிக்கிழமை) முழுமையாக அகற்றிட வேண்டும்.
உண்ணாவிரதம்
அவ்வாறு அகற்றாவிட்டால் வருகிற 27-ந் தேதி(திங்கட்கிழமை) நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், காரைக்கால், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், கன்னியாகுமரி ஆகிய 8 மாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரத போராட்டம் மற்றும் சாலை மறியலில் ஈடுபடுவது என்று ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. .
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மான நகலை, மீன்வளத்துறை அமைச்சர், மீன்வளத்துறை அதிகாரிகளை சந்தித்து கொடுத்து உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.