மின்கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த தொழிலாளி
நிலக்கோட்டை அருகே, மனைவியை சேர்த்து வைக்கக்கோரி மின்கோபுரத்தில் ஏறி கூலித்தொழிலாளி தற்கொலை மிரட்டல் விடுத்தார்.
நிலக்கோட்டை
கூலித்தொழிலாளி
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள கல்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் துரைப்பாண்டி (வயது 48). கூலித்தொழிலாளி. அவருடைய மனைவி ரெட்டியம்மாள் (42). இவர், தனியார் மில்லில் வேலை செய்து வருகிறார்.
இவர்களுக்கு சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். மனைவி, குழந்தைகளை கல்கோட்டை கிராமத்தில் விட்டு விட்டு கூலிவேலைக்கு செல்வதாக கூறி துரைப்பாண்டி வெளியூர் சென்றார்.
அதன்பின்னர் 20 ஆண்டுகளுக்கு பிறகு அவர், கடந்த ஆண்டு மீண்டும் கல்கோட்டைக்கு வந்தார். பின்னர் துரைப்பாண்டி, ரெட்டியம்மாளுடன் சேர்ந்து வாழ்ந்தார்.
இந்தநிலையில் மதுபானம் குடித்து விட்டு ரெட்டியம்மாளிடம் துரைப்பாண்டி அடிக்கடி தகராறு செய்து வந்ததாக தெரிகிறது. இதனால் தன்னுடன் இருக்க வேண்டாம் எனக்கூறி துரைப்பாண்டியை ரெட்டியம்மாள் வீட்டை விட்டு வெளியே அனுப்பி விட்டதாக கூறப்படுகிறது.
போலீசில் புகார்
இதுகுறித்து நிலக்கோட்டை போலீஸ் நிலையத்தில் துரைப்பாண்டி நேற்று காலை புகார் செய்தார். பின்னர் மாலையில், போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது, ரெட்டியம்மாளிடமும் விசாரணை நடத்தி சேர்த்து வைக்க நடவடிக்கை எடுப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
ஆனால் போலீசார் மீது நம்பிக்கை இழந்த துரைப்பாண்டி, போலீஸ் நிலையத்தில் இருந்து வெளியேறி னார். பின்னர் அவர், நிலக்கோட்டையில் இருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ள முசுவனூத்து கிராமத்துக்கு வந்தார்.
அங்குள்ள தனியார் தொழிற்சாலை அருகே சென்ற அவர், திடீரென தனது உடலில் மண்எண்ணெயை ஊற்றினார். அதன்பிறகு அப்பகுதியில் உள்ள மின் கோபுரத்தில் விறுவிறுவென ஏறினார். சுமார் 100 அடி உயரத்துக்கு சென்ற துரைப்பாண்டி அங்கிருந்தபடி சத்தம் போட்டார்.
தற்கொலை மிரட்டல்
மனைவியை தன்னுடன் சேர்த்து வைக்க வேண்டும் என்றும், இல்லையெனில் மின்கோபுரத்தில் இருந்தபடியே தீக்குளித்து தற்கொலை செய்து கொள்வேன் என்றும் துரைப்பாண்டி மிரட்டல் விடுத்தார்.
மின்கோபுரத்தில் ஒருவர் ஏறி நின்று, தற்கொலை மிரட்டல் விடுத்த காட்சியை நிலக்கோட்டை-அணைப்பட்டி சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இதுகுறித்து நிலக்கோட்டை போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன்பேரில் போலீஸ் துணை சூப்பிரண்டு சுகுமாரன் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்தனர். இதேபோல் நிலக்கோட்டை தீயணைப்பு படையினரும் அங்கு வந்தனர். மேலும் இந்த சம்பவம் காட்டுத்தீ போல பரவியதால் கிராம மக்களும் அப்பகுதியில் குவிந்தனர்.
பேச்சுவார்த்தை
தான் வைத்திருந்த தீப்பெட்டியை காட்டியபடி, தீக்குளிக்க போவதாக அவர் தொடர்ந்து அச்சுறுத்தியபடி இருந்தார். இதனால் எந்த நேரத்திலும் துரைப்பாண்டி தீக்குளித்து தற்கொலை செய்து கொள்ளக்கூடும் என்ற பரபரப்பான நிலை ஏற்பட்டது.
துரைப்பாண்டியிடம், போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். துரைப்பாண்டியின் உறவினர்களும், அங்கு வந்து அவரை சமரசம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர்.
ரெட்டியம்மாளை, துரைப்பாண்டியுடன் சேர்த்து வைப்பதாக போலீசார் உறுதி அளித்தனர். இதனை நம்பிய துரைப்பாண்டி, மின்கோபுரத்தில் இருந்து கீழே இறங்கினார். ½ மணி நேரம் நடந்த போராட்டம் முடிவுக்கு வந்தது.
போலீசார் எச்சரிக்கை
மின்கோபுரத்தில் இருந்து துரைப்பாண்டி இறங்கியபிறகே அங்கு கூடியிருந்த கிராம மக்களும், போலீசாரும், தீயணைப்பு படையினரும் நிம்மதி அடைந்தனர். இதனையடுத்து துரைப்பாண்டி மீது தீயணைப்பு படையினர் தண்ணீரை ஊற்றினர்.
இதைத்தொடர்ந்து அவர் விசாரணைக்காக நிலக்கோட்டை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டார். பின்னர் துரைப்பாண்டியை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.