ஈரப்பதம் காரணமாக கொப்பரை தேங்காய் விலை குறைந்தது
ஈரப்பதம் காரணமாக கொப்பரை தேங்காய் விலை குறைந்தது
பொள்ளாச்சி
ஈரப்பதம் காரணமாக ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொப்பரை தேங்காய் விலை குறைந்தது.
ஏலம்
ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று கொப்பரை தேங்காய் ஏலம் நடைபெற்றது. ஏலத்திற்கு கண்காணிப்பாளர் மணிவாசகம் தலைமை தாங்கினார். பொள்ளாச்சி, ஆனைமலை மற்றும் உடுமலை சுற்று வட்டார பகுதிகளில் இருந்து விவசாயிகள் கொப்பரை தேங்காய்களை ஏலத்திற்கு கொண்டு வந்தனர்.
வியாபாரிகள் போட்டி போட்டு ஏலம் எடுத்தனர். கடந்த வாரத்தை விட கொப்பரை தேங்காய் வரத்து அதிகரித்து இருந்தது. இதற்கிடையில் ஈரப்பதம் காரணமாக கொப்பரை தேங்காய் விலை உயரவில்லை. இதனால் விவசாயிகள் கவலை அடைந்தனர். இதுகுறித்து ஒழுங்குமுறை விற்பனை கூட அதிகாரிகள் கூறியதாவது:-
வரத்து அதிகரிப்பு
ஏலத்திற்கு 62 விவசாயிகள் 437 மூட்டை கொப்பரை தேங்காய்களை கொண்டு வந்தனர். 10 வியாபாரிகள் கலந்துகொண்டு ஏலம் எடுத்தனர். கொப்பரை தேங்காய் தரம் பிரிக்கப்பட்டு ஏலம் விடப்பட்டது. அதன்படி 238 மூட்டை முதல் தர கொப்பரை தேங்காய் ரூ.96.50 முதல் ரூ.100.10 வரையும், 2-ம் தர கொப்பரை தேங்காய் கிலோவுக்கு ரூ.75.40 முதல் ரூ.90.20 வரையும் ஏலம் போனது.
கடந்த வாரத்தை விட 204 மூட்டை கொப்பரை தேங்காய் வரத்து அதிகரித்து இருந்தது. இதற்கிடையில் அவ்வப்போது வெயில் அடித்தாலும் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவுவதால் கொப்பரை தேங்காயை காய வைக்க முடியவில்லை. இதனால் கொப்பரை தேங்காயில் ஈரப்பதம் அதிகமாக இருந்தாலும், எண்ணெய் மார்க்கெட் சரிவு காரணமாகவும் விலை குறைந்தது.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.