திருப்போரூர் அருகே கையகப்படுத்திய மேய்ச்சல் நிலத்தை திரும்ப வழங்க கோரிக்கை
திருப்போரூர் அருகே கையகப்படுத்திய மேய்ச்சல் நிலத்தை திரும்ப வழங்கிட வேண்டும் என ஊராட்சி மன்ற தலைவர் தலைமையில் கோரிக்கை மனுவினை கலெக்டர் அலுவலகத்தில் வழங்கினர்.
செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகத்தில்
செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் அடுத்த செம்பாக்கம் ஊராட்சி அச்சரவாக்கம் கிராமத்தில் உள்ள நிலத்தை கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக கிணறு வெட்டி பயிர் வைத்தும் வீடுகள் கட்டியும் ஆடுமாடுகளை மேய்த்தும் கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த மாதம் திருப்போரூர் ஆர்.டி.ஓ. சுமார் 10 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தி அரசுக்கு சொந்தமான இடமென எச்சரிக்கை பலகை வைத்ததாக கூறப்படுகின்றது.
இந்நிலையில் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட அச்சரவாக்கம் கிராம மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் விவசாயம் செய்திடவும் கால்நடைகளின் மேய்ச்சலுக்காக பயன்படுத்தவும் மேற்கண்ட நிலத்தை திரும்ப வழங்கிட வேண்டும் என ஊராட்சி மன்ற தலைவர் கண்ணன் தலைமையில் கோரிக்கை மனுவினை வழங்கினர்.