காஞ்சீபுரம் சரகத்தில் ஒரே நாளில் 20 ரவுடிகள் கைது: போலீஸ் டி.ஐ.ஜி
காஞ்சீபுரம் சரகத்தில் ஒரே நாளில் நடைபெற்ற தேடுதல் வேட்டையில் 20 ரவுடிகள் கைது செய்யப்பட்டதாக போலீஸ் டி.ஐ.ஜி. தெரிவித்துள்ளார்.
தீவிர கண்காணிப்பு
காஞ்சீபுரம் சரகத்தில் ஒரே நாளில் சரித்திரப்பதிவேடு குற்றவாளிகள் 20 பேர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து காஞ்சீபுரம் போலீஸ் டி.ஐ.ஜி. நிருபர்களிடம் கூறியதாவது:-
காஞ்சீபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களை உள்ளடக்கிய காஞ்சீபுரம் சரகத்தில் நேற்றுமுன்தினம் பகல் 11 மணி முதல் நேற்று அதிகாலை வரை விடிய, விடிய 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குற்றச் செயல்களில் யாரும் ஈடுபடுகின்றனரா? என தீவிர தேடுதல் வேட்டையில் போலீசார் ஈடுபட்டனர்.
ஒரே நாளில் 150-க்கும் மேற்பட்ட விடுதிகளில் தீவிர சோதனையும் மேற்கொள்ளப்பட்டது.
சரித்திரப்பதிவேடு குற்றவாளிகள்
அதில், சரித்திரப்பதிவேடு குற்றவாளிகள் 1,210 பேரின் இருப்பிடங்களை கண்காணித்து, அவர்களில் 20 பேர் கைது செய்யப்பட்டிருப்பதுடன் அவர்களிடமிருந்த 13 கத்திகளையும் பறிமுதல் செய்துள்ளோம்.
கள்ளச்சாராய வழக்குகள் 103 பதிவு செய்யப்பட்டுள்ளது. கொலைக்குற்றம் உட்பட பல்வேறு கொடுங்குற்றங்களில் ஈடுபட்ட 25 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காஞ்சீபுரம் சரகத்தில் 1,500 சரித்திரப் பதிவேடு குற்வாளிகள் இருந்தனர். தற்போது மேலும் 309 பேர் சேர்க்கப்பட்டு மொத்தம் 1,809 பேர் காவல்துறையின் தீவிர கண்காணிப்பில் இருந்து வருகின்றனர்.
காஞ்சீபுரம் சரகத்தில் முககவசம் அணியாத 440 பேரிடம் தலா ரூ.100 வீதம் அபராதமும் வசூலிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.