‘தினத்தந்தி‘ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 99626 78888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
மழைநீர் கால்வாய் ஆக்கிரமிப்பு
சென்னை பழைய வண்ணாரப்பேட்டை கப்பல் போலு தெருவில் மழைநீர் கால்வாய் செல்லும் வழியில் செங்கல், ஜல்லி கற்களை கொட்டி வைத்துள்ளனர். இதனால் மழைநீர் கால்வாயில் செல்லாமல் சாலையில் ஓடும் நிலை உள்ளது.
மக்கள் சிரமப்படக்கூடாது என்று அரசு நினைத்தாலும் சிலர் தங்கள் சுயநலத்துக்காக இது போன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள். எனவே இதுகுறித்து அதிகாரிகள் களஆய்வு செய்து சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கார்த்தி, கப்பல் போலு தெரு.
அச்சுறுத்தும் மின் வயர்கள்
சென்னை திருவொற்றியூர் பழைய எம்.ஜி.ஆர். நகர் சி.பி.சி.எல்.கார்னர் 5-வது தெருவில் மின் இணைப்பு பெட்டி கீழே ஆபத்தான முறையில் வயர்கள் செல்கிறது. இது உயிர்பலி வாங்க காத்திருப்பது போன்று உள்ளது. இதனால் மிகுந்த அச்சமாக இருக்கிறது. எனவே மின்வாரிய அதிகாரிகள் உடடினயாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
- வசந்தி, திருவொற்றியூர்.
100 அடி சாலையில் கழிவுநீர் தேக்கம்
சென்னை வடபழனி 100 அடி சாலையில் பெரியார் பாதை சிக்னல் அருகே கழிவுநீர் குட்டை போன்று தேங்கி உள்ளது. எப்போதும் பரபரப்புடன் காணப்படும் இந்த சாலையில் இப்படியொரு அவலநிலை இருப்பது மிகுந்த வேதனையாக இருக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அங்கு தேங்கி உள்ள கழிவுநீரை அகற்ற நடவடிக்கை எடுப்பதுடன், வருங்காலங்களிலும் இங்கு கழிவுநீர் தேங்காதவாறு உரிய தீர்வு காண வேண்டும்.
-வாகன ஓட்டிகள்.
மின்விளக்கு எரியவில்லை
சென்னை வில்லிவாக்கம் சிட்கோ நகர் 2-வது மெயின் ரோடு அருகில் உள்ள 57-வது தெருவில் உள்ள மின் கம்பத்தின் எண் (D-94/ 1436/z-8) மின் விளக்கு 6 மாதங்களாக எரியாமல் உள்ளது. எனவே எரியாத இந்த மின்விளக்கை மாற்றி புதிய மின்விளக்கை பொறுத்திட வேண்டும் என்று மின்சார வாரியத்துக்கு கோரிக்கை விடுக்கிறோம்.
-பூபதி, சிட்கோ நகர்.
அம்பத்தூர் தொழிற்பேட்டையின் அவலம்
சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டை தபால்நிலைய சாலை மிகவும் மோசமாக இருக்கிறது. அங்குள்ள புதிய டினி செக்டார் பகுதி சாலையோரத்தில் மரக்கழிவுகள், கட்டிடக்கழிவுகள் குவிந்து கிடக்கிறது. இது விஷ ஜந்துகளுக்கு குடியிருப்பு போன்று அமைந்துள்ளது. மின்சார வாரியம் சார்பில் புதிய மின்கம்பங்கள் அமைப்பதற்கு அடித்தளம் அமைக்கப்பட்டிருந்தாலும், இதுவரையில் புதிய மின்கம்பங்கள் பொறுத்தப்படவில்லை. அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள அவலநிலையை அதிகாரிகள் மாற்ற வேண்டும்.
-டி.மூர்த்தி, அம்பத்தூர் தொழிற்பேட்டை சங்கம்.
கோவில் அருகே கழிவுநீர் தேக்கம்
சென்னை திருவான்மியூர் பாம்பன் சுவாமி கோவில் அருகே கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இது கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. மேலும் வாகன ஓட்டிகளும் சிரமத்துடன் செல்லும் நிலைமை இருக்கிறது. அதிகாரிகள் கவனிப்பார்களா?
- பொதுமக்கள், திருவான்மியூர்.
அலட்சியம் வேண்டாமே...
சென்னை அயனாவரம் சயானி பஸ் நிலையம் அருகே சாலையின் நடுவே வழிகாட்டி கம்பம் சரிந்து கிடக்கிறது. இது ஆபத்தாகவும், சாலையின் அழகை சீர்குலைக்கும் வகையிலும் இருக்கிறது. கழிவுகளில் இருந்து உரம் தயாரிக்கும் மாநகராட்சி கூடம் எதிரே இந்த நிலை உள்ளது. தினமும் மாநகராட்சி ஊழியர்களும் இதனை கண்டும், காணாமல் அலட்சியமாக செல்வது வேதனையாக இருக்கிறது.
- சுரேஷ், அயனாவரம்.
அவல நிலையில் கட்டணமில்லா கழிப்பிடம்
சென்னை திருவொற்றியூர் அப்பர் நகர் 3-வது தெருவில் உள்ள மாநகராட்சி கட்டணமில்லா கழிப்பிடம் முறையான பராமரிப்பு இல்லாமல் பாழடைந்த கட்டிடம் போன்று உள்ளது. கழிப்பிடம் உபகரணங்கள் அனைத்தும் சேதம் அடைந்துள்ளன. அவலநிலையில் இருக்கும் இந்த கழிப்பிடம் புதுப்பிக்கப்படுமா?
- பொதுமக்கள், அப்பர் நகர்.
சாலை படுமோசம்
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் சாமியார் கேட் முதல் சட்டமங்கலம் வரை உள்ள சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. ராட்சத பள்ளங்களாக இருக்கிறது. மழைநீர் தேங்கினால் நீச்சல் குளம் போன்று சாலை காட்சி அளிக்கிறது. இந்த வழியாக பள்ளி மாணவர்கள் சென்று வருகிறார்கள். எனவே போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் இருக்கும் இந்த சாலையை சீரமைத்து தர வேண்டும்.
- செந்தில்குமார், மறைமலைநகர்.
தலைவர்கள் சிலை அருகே அசுத்தம்
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பஸ்நிலையத்தில் உள்ள பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோர் சிலை அருகே கழிவுநீர் பெருமளவு தேங்கி அசுத்தமாக காட்சி அளிக்கிறது. இப்பகுதி முழுவதும் மிகுந்த தூர்நாற்றம் வீசுகிறது. இதன் மூலம் பஸ்நிலையத்துக்கு வரும் பயணிகளுக்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-உமாபதி, மீஞ்சூர்.
ஆபத்தான கிணறு
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட 19-வது வார்டு கவுரிப்பேட்டை பழைய கள்ளுக்கடை தெருவின் கடைசியில் பொது கிணறு உள்ளது. அந்த கிணற்றில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால் அதன் வழியாக கழிவுநீர் சென்று நிரம்பி உள்ளது. மேலும் இந்த கிணறு திறந்தவாறு ஆபத்தான நிலையில் உள்ளது. எனவே அசம்பாவித சம்பங்கள் ஏதேனும் நிகழும் முன்பு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- கவுரிப்பேட்டை பொதுமக்கள்.