பத்மநாபபுரம் கோட்டைச்சுவர் இடிந்து விழுந்தது

குமரியில் பெய்து வரும் தொடர் மழையால், பத்மநாபபுரம் கோட்டைச்சுவர் இடிந்து விழுந்தது. வரலாற்று சிறப்பு மிக்க கட்டிடத்தை பாதுகாக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2021-12-06 21:49 GMT
பத்மநாபபுரம்:
குமரியில் பெய்து வரும் தொடர் மழையால், பத்மநாபபுரம் கோட்டைச்சுவர் இடிந்து விழுந்தது. வரலாற்று சிறப்பு மிக்க கட்டிடத்தை பாதுகாக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பத்மநாபபுரம் கோட்டை
குமரி மாவட்டம் தக்கலை அருகே பத்மநாபபுரம் அரண்மனை உள்ளது. குமரி மாவட்டம் 1956-ம் ஆண்டு தமிழகத்துடன்   இணைந்தது. அப்போது ஏற்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் நூற்றாண்டுகளை கடந்த பத்மநாபபுரம் அரண்மனை கேரள அரசின் கட்டுப்பாட்டில் சென்றது.
திருவிதாங்கூர் மன்னர்களால் கட்டப்பட்ட இந்த கோட்டையை பார்க்க தினமும் உள்நாடு மட்டுமல்லாமல் வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். இதன் கலை நுட்பம் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது.
இடிந்து விழுந்தது
குமரி மாவட்டத்தில் தொடர் மழை பெய்து வருகிறது. இந்தநிைலயில் கோட்டை சுற்றுச்சுவரின் கல் இடுக்குகளிலும், மேற்பகுதியிலும் செடி-கொடிகள் வளர்ந்து சுவர் கம்பீரத்தை இழந்து, சேதமடைந்த நிலையில் உள்ளன. செடி-கொடிகளை அகற்றி பராமரிக்கப்படாத நிலையில்  ஆர்.சி.தெரு குடியிருப்பு பகுதியில் இருந்த கோட்டையின் ஒரு பகுதி சுவர் 100 அடி தூரத்துக்கு நேற்று முன்தினம் இடிந்து விழுந்தது. இதன் அருகிலேயே குடியிருப்புகள் உள்ளன. இந்த சம்பவத்தில் அதிர்ஷ்ட வசமாக குடியிருப்புவாசிகள் காயமின்றி தப்பினர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்தும் தடைப்பட்டு உள்ளது.
அரண்மனையின் கோட்டை சுற்றுசுவர் தற்போது தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. வரலாற்று சிறப்பு மிக்க கட்டிடங்களை பாதுகாக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

மேலும் செய்திகள்