வங்கியில் ‘திடீர்’ தீ விபத்து

கொல்லங்கோடு அருகே வங்கியில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.2 லட்சம் மதிப்புள்ள மின்சாதன பொருட்கள் எரிந்து நாசமானது.;

Update: 2021-12-06 21:43 GMT
கொல்லங்கோடு:
கொல்லங்கோடு அருகே வங்கியில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.2 லட்சம் மதிப்புள்ள மின்சாதன பொருட்கள் எரிந்து நாசமானது.
இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-
வங்கியில் புகை மூட்டம்
கொல்லங்கோடு அருகே உள்ள சூழால் பகுதியில் தேசியமயமாக்கப்பட்ட வங்கி உள்ளது. இந்த வங்கிக்குள் இருந்து நேற்று அதிகாலையில் திடீரென புகை வரத்தொடங்கியது. நேரம் செல்ல செல்ல புகையின் அளவு கூடிக்கொண்டே போனது. மேலும், வங்கிக்குள் தீ எரிய தொடங்கியது. 
இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்தவர்கள் கொல்லங்கோடு போலீசாருக்கும், தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் கொடுத்தனர்.
தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். இதற்கிடையே வங்கி அதிகாரிகள் விரைந்து வந்து கதவுகளை திறந்து கொடுத்தனர். தொடர்ந்து, தீயணைப்பு வீரர்கள் வங்கியில் எரிந்த தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஒரு மணி நேரம் போராடி தீயை முற்றிலுமாக அணைத்தனர்.
ரூ.2 லட்சம் சேதம்
அதனைத்தொடர்ந்து தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, கணினி சர்வர் அறையில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக‌ தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் ரூ.2 லட்சம் மதிப்பிலான மின்சாதன பொருட்கள் எரிந்து நாசமாகின. ஆனால், வங்கி கோப்புகள் எதுவும் எரியவில்லை என்று கூறப்படுகிறது. 
சரியான நேரத்தில் தீ அணைக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த தீ விபத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்