‘தினத்தந்தி’ புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 8939278888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
ஆபத்தான நிலையில் மரம்
சேலம் மாவட்டம் தம்மம்பட்டி அருகே கோனேரிப்பட்டியில் உள்ள வீட்டின் மீது ராட்சத புளிய மரம் ஒன்று சாய்ந்த நிலையில் உள்ளது. மேலும் அந்த பகுதியில் உள்ள பலரது வீட்டின் மீது விழும் நிலையில் மரங்கள் உள்ளன. இதுபற்றி பலமுறை அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே அசம்பாவிதம் ஏற்படும் முன்பு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுத்து வீட்டின் மீது விழும் நிலையில் உள்ள மரங்களை வெட்டி அகற்ற வேண்டும்.
-ஊர் பொதுமக்கள், கோனேரிப்பட்டி, சேலம்.
===
சாலை வசதி
நாமக்கல் மாவட்டம் முத்துகாப்பட்டி பெருமாபாளையம் காலனி கிழக்கு தெருவில் 25 ஆண்டுகளாக சாலை வசதி இல்லை. மேலும் மழைக்காலங்களில் அந்த பகுதி சேறும், சகதியுமாக காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இதுபற்றி புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே பொதுமக்களின் நலன் கருதி அந்த கிராமத்தில் தார் சாலை அமைத்து தர வேண்டும்.
-ஊர்மக்கள், பெருமாபாளையம் காலனி, நாமக்கல்.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் தாலுகா ஜெகதேவி பகுதியில் திருவண்ணாமலை-கிருஷ்ணகிரி செல்லும் நெடுஞ்சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இந்த சாலையில் தினமும் ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. இதனால் வாகன ஓட்டிகள் சாலையை மிகவும் சிரமத்துடன் கடந்து செல்கிறார்கள். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஊர்பொதுமக்கள், ஜெகதேவி, கிருஷ்ணகிரி.
====